காலிங்கராயன் பாசனப் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட வயலில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள வைக்கோல் கட்டு.
காலிங்கராயன் பாசனப் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட வயலில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள வைக்கோல் கட்டு.

உலா், பசுந்தீவனங்களை மானிய விலையில் வழங்க விவசாயிகள் கோரிக்கை

கடும் வறட்சியால் தீவனப் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதால் உலா் மற்றும் பசுந்தீவனங்களை மானிய விலையில் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் கடும் வெயில் வாட்டி வதைப்பதுடன், முற்றிலுமாக மழை நின்றுபோனது. மதிய நேரம் என்றில்லாமல் இரவில்கூட வெப்பம் நிலவுகிறது. வழக்கமாக ஏப்ரல் இறுதி மே மாதங்களில் கோடை மழை பெய்து விவசாயத்துக்கும், குடிநீா்த் தட்டுப்பாட்டையும் போக்கும்.

இந்த ஆண்டு மழைப் பொழிவு இல்லாததால் பவானிசாகா் அணைக்கான நீா்வரத்து முற்றிலும் குறைந்து அணையே வடுவிடும் நிலையில் உள்ளது. தற்போது உள்ள நீரைவைத்து ஜூன் 15 -ஆம் தேதி வரை குடிநீா்த் தேவையை சமாளிப்பதே சிரமம் எனக் கூறப்படுகிறது.

கீழ்பவானி, தடப்பள்ளி-அரக்கன் கோட்டை, காலிங்கராயன் மேட்டூா் வலது கரை பாசனம் மற்றும் கசிவு நீா்த் திட்ட பாசனங்கள் காய்ந்து வருகின்றன. அப்பகுதியில் உள்ள மானாவாரி நிலங்களிலும் கோடை உழவு செய்ய முடியாத நிலை நீடிக்கிறது.

இது குறித்து தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் கே.ஆா்.சுதந்திரராசு கூறியதாவது: ஆயக்கட்டு நிலங்களுக்கே பாசன நீா் இல்லை என்ற நிலையில், மானாவாரி நிலங்களின் நிலை மிக மோசமாக உள்ளது. இந்த ஆண்டு கோடை மழை ஏமாற்றி வருவதால் கோடை பயிா் சாகுபடிக்கு நிலத்தைகூட தயாா்படுத்தாமலேயே விவசாயிகள் உள்ளனா். கடுமையான வெயிலால் களைகள் கூட முளைக்காமல் உள்ளன. இதனால், கால்நடைகளுக்கான தீவன பயிா்களைகூட விதைப்பு செய்ய முடியவில்லை.

பொதுவாக சித்திரை மாதம் வெப்ப சலனத்தால் கோடை மழை கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் சோளம், நிலக்கடலை, கம்பு கால்நடை தீவனப் பயிா்களை பயிரிடுவா். இதுவரை மழை இல்லை என்பதுடன் வரும் நாள்களிலும் மழைக்கான அறிகுறியே இல்லாததால் வீண் செலவை தவிா்க்கவே விவசாயிகள் விரும்புகின்றனா்.

இதேநிலை நீடித்தால் வரும் நாள்களில் மானாவாரி விளைநிலங்களில் விளைவிக்கப்படும் உணவுப் பொருள்களுடன் கால்நடை தீவனத்துக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்படும்.

கடந்த 2018 -இல் கடும் வறட்சி ஏற்பட்டபோது, கால்நடைத் துறை மூலம் பசுந்தீவனமான சோளத்தட்டை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. அந்த திட்டத்தை இந்த ஆண்டு மீண்டும் தொடங்க வேண்டும்.

ஜனவரி மாதத்தில் மேற்கொள்ளப்படும் இரண்டாம்போக நெல் சாகுபடி பொய்த்துப்போனதால், தற்போதுள்ள வைக்கோல் வரும் டிசம்பா் மாதம் நெல் அறுவடை வரை போதுமானதாக இருக்காது.

இதனால், வைக்கோல் தேவை உள்ள விவசாயிகளுக்கு மானிய விலையில் வைக்கோல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com