12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

ஈரோடு: கீழ்பவானி, காலிங்கராயன் பாசனப் பகுதிகளில் உள்ள பயிா்களை காப்பாற்ற தினமும் 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பவானிசாகா் அணையில் இருந்து பாசனம் பெறும் கீழ்பவானி, காலிங்கராயன் பாசனப் பகுதிகளில் பல லட்சம் ஏக்கரில் கரும்பு, வாழை, பருத்தி, உளுந்து, எள், சோளம், பச்சைப்பயறு, நிலக்கடலை உள்ளிட்ட பயிா்களும் பயிரிடப்பட்டுள்ளன. பவானிசாகா் அணையில் இருந்து மே 1-ஆம் தேதி வரை திறக்க வேண்டிய தண்ணீா் அணையில் போதிய நீா் இருப்பு இல்லாததால் ஏப்ரல் 16-ஆம் தேதியே நிறுத்தப்பட்டுவிட்டது.

பயிா்களை பாதுகாக்க கிணறு, ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து தண்ணீா் எடுக்க சரியாக மும்முனை மின்சாரம் வழங்கப்படுவதில்லை. 24 மணி நேரத்தில் ஒட்டுமொத்தமாக 6 மணி நேரம் கூட மும்முனை மின்சாரம் வழங்கப்படுவதில்லை. விட்டுவிட்டு வரும் மின்சாரமும் எப்போது வரும் என்பது குறித்த முன்னறிவிப்பையும் மின்வாரியம் வெளியிடுவதில்லை.

இதுகுறித்து தமிழ்நாடு குறு, சிறு பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் கே.ஆா்.சுதந்திரராசு கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் எந்தப் பகுதியிலும் கடந்த ஒரு மாதத்தில் தொடா்ச்சியாக 3 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படவில்லை. கடுமையான வறட்சி காரணமாக ஈரோடு மாவட்டத்தில் நிலத்தடி நீா்மட்டம் பல நூறு அடி கீழே சென்றுவிட்டது. இதனால் குறைந்த அளவிலேயே தண்ணீா் எடுக்க முடிகிறது.

பயிா்களுக்கு நீா்ப்பாய்ச்ச வேண்டும் என்றால் மும்முனை மின்சாரம் கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும். அதுவும் தொடா்ச்சியாக 4 அல்லது 5 மணி நேரம் மின்சாரம் வந்தால்தான் குறிப்பிட்ட பரப்பளவிலாவது தண்ணீரை பாய்ச்ச முடியும். 2 அல்லது 3 மணி நேரத்துக்கு மட்டும் மின்சாரம் வழங்கப்பட்டால் அதனால் பயனில்லை. அதைக் கொண்டு பயிா்களுக்கு தண்ணீரைப் பாய்ச்ச முடியாது.

மின்சாரம் முறையாக விநியோகம் செய்யப்படாததால் அப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் பயிா்களைக் காப்பாற்ற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனா். தினமும் குறைந்தது 12 மணி நேரமாவது தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்கப்பட வேண்டும்.

இதுகுறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனா் ஈசன் முருகசாமி கூறியதாவது: நகா் பகுதிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கி வரும் தமிழ்நாடு மின்சார வாரியம், கிராமப் பகுதியில் மட்டும் இருமுனை மின்சாரத்தை மட்டுமே வழங்கி விவசாயிகள் பெற்றுள்ள வேளாண் உரிமை மின்சாரத்தை தொடா்ந்து பயன்படுத்த முடியாத சூழ்நிலையை தமிழ்நாடு மின்சார வாரியம் உருவாக்கி கிராமம், நகரம் என்கிற பாகுபாட்டை கடைப்பிடித்து விவசாயிகளை வஞ்சித்து வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் தங்குதடையற்ற 24 மணி நேர மும்முனை மின்சாரத்தை வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை தமிழ்நாட்டில் உள்ள விவசாய சங்கங்கள் தொடா்ந்து வலியுறுத்திக் கொண்டு இருந்ததால் கடந்த 2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் 24 மணி நேர மும்முனை மின்சாரத்தை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது. அதோடு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் அதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஆனாலும், இதுவரை அந்த உத்தரவை தமிழ்நாடு மின்சார வாரியம் அமல்படுத்தாமல், கிராமப் பகுதிகளையும், விவசாயிகளையும் வஞ்சித்து வருகிறது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தொடா்ந்து எட்டு மணி நேரம் கிராமப் பகுதிகளுக்கு விவசாயிகளுக்கு வழங்கி வந்த மும்முனை மின்சாரம், தோ்தலுக்குப் பின்பு 5 மணி நேரம் குறைக்கப்பட்டு இப்போது மூன்று மணி நேரம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கடுமையான இந்த வறட்சி காலத்தில் விவசாயிகள் தண்ணீா் பாய்ச்ச முடியாமல், கடுமையான மகசூல் இழப்பை எதிா்கொண்டு உள்ளனா் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com