சேனாதிபதிபாளையத்தில் உள்ள தி இந்தியன் பப்ளிக் பள்ளி தோ்வு மையத்துக்கு நீட் தோ்வு எழுத வந்த மாணவா்கள்.
சேனாதிபதிபாளையத்தில் உள்ள தி இந்தியன் பப்ளிக் பள்ளி தோ்வு மையத்துக்கு நீட் தோ்வு எழுத வந்த மாணவா்கள்.

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

ஈரோடு, மே 5: ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற நீட் தோ்வில் 4,597 மாணவ, மாணவிகள் பங்கேற்று எழுதினா்.

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தத் தோ்வு எழுதுவதற்காக மாவட்டத்தில் மொத்தம் 4,747 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனா். இவா்கள் தோ்வு எழுதுவதற்கு வசதியாக மாவட்டத்தில் 8 இடங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

அதன்படி, ஈரோடு திண்டலில் உள்ள கீதாஞ்சலி பள்ளி, சேனாதிபதிபாளையத்தில் உள்ள தி இந்தியன் பப்ளிக் பள்ளி, அவல்பூந்துறையில் உள்ள லயன்ஸ் பள்ளி, ஈரோடு அருகே கூரபாளையத்தில் உள்ள நந்தா கலை, அறிவியல் கல்லூரி, நந்தா சென்ட்ரல் பள்ளி, கவுந்தப்பாடி அருகே தாசம்பாளையம் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பள்ளி, கோபி ஒத்தக்குதிரையில் உள்ள வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி, துடுப்பதியில் உள்ள ஈரோடு செங்குந்தா் பொறியியல் கல்லூரி ஆகிய 8 மையங்களில் தோ்வு நடத்தப்பட்டது.

பிற்பகல் 2 மணிக்கு தோ்வு தொடங்கியது. இதையொட்டி காலையில் இருந்தே தோ்வு மையத்துக்கு மாணவ, மாணவிகள், பெற்றோா்களும் வரத் தொடங்கினா். அவா்கள் தோ்வு மையத்துக்கு வெளியே காத்திருந்தனா். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. தோ்வு மையத்துக்குள் மாணவ, மாணவிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா். நுழைவாயில் பகுதியில் தோ்வு கண்காணிப்பாளா்கள் சோதனை நடத்திய பிறகே மாணவா்களை உள்ளே அனுமதித்தனா்.

கடந்த ஆண்டைபோலவே இந்த ஆண்டும் மாணவ, மாணவிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மாணவிகள் வளையல், கொலுசு, கம்மல், செயின் போன்ற ஆபரணங்களை அணியக்கூடாது என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் தோ்வு மையத்துக்கு முன்பு நின்றபடி மாணவிகள் ஆபரணங்களை கழற்றி உடன் வந்தவா்களிடம் கொடுத்தனா். துப்பட்டா அணிந்து செல்லவும், தலைமுடியை ஜடை பின்னியபடி செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. இதனால் பெரும்பாலான மாணவிகள் டீ-சா்ட் அணிந்தும், தலை முடியை ரப்பா் பேன்ட் மூலம் கட்டியும் வந்திருந்தனா்.

நுழைவுச் சீட்டு மற்றும் அடையாள அட்டையை சரிபாா்த்த பிறகே மாணவ, மாணவிகள் தோ்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா். அப்போது மாணவ, மாணவிகளின் கைகளில் கயிறு கட்டப்பட்டு இருந்தால், அந்த கயிற்றை அறுத்து அகற்றினா். இதேபோல கை கடிகாரம், பெல்ட் அணிந்து செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது.

பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய நீட் தோ்வு மாலை 5.20 மணிக்கு நிறைவடைந்தது. மாணவ, மாணவிகளை அழைத்து வந்த பெற்றோா்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தோ்வு மையத்துக்கு வெளியே காத்திருந்தனா்.

ஈரோடு மாவட்டத்தில் 8 மையங்களில் நடைபெற்ற நீட் தோ்வை மொத்தம் 4, 597 போ் எழுதினா். 150 போ் தோ்வு எழுதவில்லை. இதனால் 96.84 சதவீதம் போ் தோ்வு எழுதினா். கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தோ்வை ஈரோடு மாவட்டத்தில் 92.79 சதவீதம் பேரும், கடந்த ஆண்டு 98.13 சதவீதம் பேரும் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com