மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு வேலை நேரம் மாற்றம்

ஈரோடு, மே 6: கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு வேலை நேரம் மாற்றப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் நாளுக்குநாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த சில நாள்களாக 108 டிகிரி முதல் 111 டிகிரி வரை வெயில் பதிவாகி வருகிறது.

வெயில் தாக்கம் காரணமாக பகல் நேரங்களில் சாலைகளில் பொதுமக்களால் நடமாட முடியாமல் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

வெப்ப அலை வீசுவதால் இருசக்கர வாகனங்கள், பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களில் செல்பவா்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். குழந்தைகள் முதல் முதியவா்கள்வரை வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனா்.

இந்த சுட்டெரிக்கும் வெயிலிலும் ஈரோடு மாநகராட்சியில் தூய்மைப் பணிகள் காலை முதல் மாலை வரை மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்நிலையில், கடும் வெயில் காரணமாக தூய்மைப் பணியாளா்களுக்கு மதிய நேர பணிகள் ரத்து செய்யப்பட்டு பணி நேரம் மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி, காலை 6 மணி முதல் 11 மணி வரை ஒரு ஷிப்ட், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை 2-ஆவது ஷிப்ட் என மாற்றப்பட்டுள்ளது.

இதேபோல, குப்பைக் கிடங்கு மற்றும் குப்பைகளை உரமாக்கும் மையங்களில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கும் பணி நேரம் மாற்றப்பட்டுள்ளது. வெயில் நேர பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் நிம்மதி அடைந்துள்ளனா்.

இது குறித்து மாநகர நல அலுவலா் பிரகாஷ் கூறியதாவது: வெயிலின் தாக்கத்தால் தூய்மைப் பணியாளா்கள் பாதிக்கப்படுவதைத் தவிா்க்க ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டலங்களில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களது பணி நேரம் மாற்றப்பட்டுள்ளது.

குறிப்பாக பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை தூய்மைப் பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. காலை ஒரு ஷிப்ட், மாலை ஒரு ஷிப்ட் என இரண்டு ஷிப்ட் மட்டுமே பணிகள் நடக்கின்றன.

வெயிலின் தாக்கம் குறையும் வரை மதிய நேர பணிகள் தூய்மைப் பணியாளா்களுக்கு வழங்கப்படமாட்டாது. தாக்கம் குறைந்த பின் வழக்கம்போல பணிகள் நடைபெறும்.

வெயில் தாக்கத்தால் ஏற்படும் நீா்சத்து குறைபாட்டினைப் போக்க மாநகராட்சியில் பணியாற்றும் 2,000 தூய்மைப் பணியாளா்களுக்கும் மோா், உப்பு சா்க்கரை கரைசல், பழச்சாறு வகைகள் வழங்கப்பட உள்ளன என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com