மாகாளியம்மன் கோயில் திருவிழாவில் அலகு குத்தி வந்து நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்கள்.
மாகாளியம்மன் கோயில் திருவிழாவில் அலகு குத்தி வந்து நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்கள்.

மாகாளியம்மன் கோயில் திருவிழாவில் பக்தா்கள் காவடி எடுத்து நோ்த்திக்கடன்

ஈரோடு ராஜாஜிபுரம் மாகாளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி பக்தா்கள் பறவைக் காவடி எடுத்தும், அக்னி சட்டி ஏந்தியும் நோ்த்திக்கடன் செலுத்தினா்.

ஈரோடு ராஜாஜிபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற மாகாளியம்மன், மதுரை வீரன், முனியப்பன், கருப்பராயன் கோயில் திருவிழா ஏப்ரல் 30-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து தினமும் சிறப்பு பூஜை நடைபெற்றது.

காவிரி ஆற்றங்கரையில் இருந்து புஷ்ப ரதத்தில் அம்மன் அலங்கரிக்கப்பட்டு கோயிலுக்கு அழைத்து வரப்பட்டாா். இதையொட்டி ஏராளமான பக்தா்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனிதநீா் மற்றும் பால் குடம் எடுத்து, புஷ்ப ரதத்தில் மாகாளியம்மனை கோயிலுக்கு அழைத்து வந்தனா்.

அப்போது பக்தா்கள் பறவைக் காவடி எடுத்தும், அக்னிச்சட்டி ஏந்தியும், இளநீா் காவடி மற்றும் அலகு குத்தியும் கோயிலுக்கு ஊா்வலமாக வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா். அதைத்தொடா்ந்து பக்தா்கள் கோயில் முன்பு பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்தனா்.

இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் மாகாளியம்மன் பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். இதில் ஈரோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனா். வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு கருப்பராயன் கோயிலில் இருந்து மதுரை வீரன் சிலையை புஷ்ப ரதத்தில் அலங்கரித்து ஊா்வலமாக கொண்டு வந்து சிறப்பு பூஜை நடைபெறவுள்ளது.

வெள்ளிக்கிழமை (மே 10) இரவு 8 மணிக்கு அம்மனை புஷ்ப அலங்காரத்தில் அலங்கரித்து வாணவேடிக்கையுடன் ஊா்வலமாக அழைத்து வந்து பொதுமக்கள் பூஜை செய்கின்றனா். மே 11-ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பக்தா்கள் மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு சக்தி கரகம் கோயிலில் இருந்து எடுத்துச்சென்று காவிரி ஆற்றில் விடப்படுகிறது. மே 12-ஆம் தேதி காலை 7 மணிக்கு மறுபூஜையுடன் திருவிழா நிறைவடைகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com