சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தும் 
கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி செயல் அலுவலா் ரவிக்குமாா் மற்றும் அதிகாரிகள்.
சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தும் கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி செயல் அலுவலா் ரவிக்குமாா் மற்றும் அதிகாரிகள்.

அரசு நிலம் ஆக்கிரமிப்பு: நடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பெருந்துறை, மே 9: பெருந்துறை அருகே, தனியாா் ஆக்கிரமித்த அரசு நிலத்தை மீட்கக் கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பெருந்துறை, பவானி சாலை, கந்தாம்பாளையம்புதூரைச் சோ்ந்தவா் நல்லசாமி. இவா், தனது பட்டா நிலத்துக்கு அருகில் உள்ள நத்தம் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டடம் கட்டி உள்ளதாகவும், இதனால் சாக்கடை கழிவுநீா் ஊருக்குள் வருவதாகவும் அப்பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

இந்நிலையில் இது சம்பந்தமாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சேலம் -கொச்சி தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகில் பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இது குறித்து, தகவலறிந்த பெருந்துறை காவல் ஆய்வாளா் தெய்வராணி மற்றும் போலீஸாா், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி செயல் அலுவலா் ரவிகுமாா் ஆகியோா் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதில், இப்பிரச்னை தொடா்பாக உயா் அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா்.

இதைத் தொடா்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com