நியாய விலைக் கடைகளில் கூடுதல் விலைக்கு விற்கப்படும் பொருள்கள்: பாதிப்புக்குள்ளாகும் பொதுமக்கள்

உதகையில் உள்ள நியாய விலைக் கடைகளில் கூடுதல் விலைக்குப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

உதகையில் உள்ள நியாய விலைக் கடைகளில் கூடுதல் விலைக்குப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
 உதகையில் இயங்கி வரும்  உதகமண்டலம் கூட்டுறவுப் பண்டகசாலையின் கட்டுப்பாட்டிலுள்ள நியாய விலைக் கடைகளில் மைதா கிலோ  ரூ. 28-க்கும்,  ரவை கிலோ  ரூ.34-க்கும்,  சேமியா பாக்கெட் ரூ. 12-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  ஆனால்,  வெளிச் சந்தையில் மைதா கிலோ ரூ. 22-க்கும்,  ரவை  ரூ. 29-க்கும்,  சேமியா   ரூ. 10-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அத்துடன்,  ஒவ்வொரு நியாய விலைக் கடைக்கும் ஆகஸ்ட் மாதத்தில் விற்பனை செய்வதற்காக  தலா 250 கிலோ மைதாவும்,  250 கிலோ ரவையும் கொண்டு வரப்பட்டுள்ளது. இவற்றை,  நியாய விலைக்  கடை ஊழியர்கள் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் குறைந்தது ரூ. 100-க்கு இந்தப்  பொருள்களை விற்பனை செய்ய வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கூடுதல் விலை கொடுத்து நியாய விலைக் கடைகளில் பொருள்களை பொதுமக்கள் வாங்க  மறுத்து வருகின்றனர். இப்பொருள்களை குறைந்தபட்சமாவது வாங்காவிட்டால்  அவர்களுக்கான ஏனைய அத்தியாவசியப் பொருள்களான அரிசி,  சர்க்கரை,  பருப்பு போன்றவை வழங்கப்பட மாட்டாது எனவும் எச்சரிக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. இதனால், கூடுதல் விலை கொடுத்து  ஏதாவது ஒரு பொருளை பொதுமக்கள் வாங்கிச் செல்கின்றனர்.  
இதுகுறித்து  கூட்டுறவுப் பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளர் அலுவலக அதிகாரிகள் கூறியதாவது:
எந்த நியாய விலைக் கடையிலும் இத்தகைய பொருள்களை விற்பனை செய்யுமாறு நிர்பந்திக்கவில்லை.  கூட்டுறவுத் துறையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டுக்  கொள்முதல்  குழுவினரின்  தீர்மானத்தின்படியே இந்தப்  பொருள்கள்  விற்பனை செய்யப்படுகின்றன.
 இதற்கான விலையையும் அக்குழுவினரே தீர்மானிப்பதால், அதில்,  தங்களால்  தலையிட முடியாது என்றனர்.
மொத்தத்தில் நியாய விலைக் கடைகளுக்குச் செல்லும் பொதுமக்களை  தாங்கள் அளிக்கும்  குறிப்பிட்ட பொருள்களை  வாங்க வேண்டுமென கட்டாயப்படுத்துவதும்,  தரமற்ற பொருள்களை கூடுதல் விலைக்கு  விற்பதாலும் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புள்ளாகி வருகின்றனர்.  இதில்,  மாவட்ட  நிர்வாகம்
தலையிட்டு  உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com