கன்டோண்மென்ட் பள்ளிக்கு இலவச பேருந்து வசதி நிறுத்தம்: காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள்

குன்னூர் வெலிங்டன் கன்டோண்மென்ட் பள்ளிகளுக்கு  வழங்கப்பட்டு வந்த இலவசப் பேருந்து வசதியை மத்திய அரசு நிறுத்தியதால்

குன்னூர் வெலிங்டன் கன்டோண்மென்ட் பள்ளிகளுக்கு  வழங்கப்பட்டு வந்த இலவசப் பேருந்து வசதியை மத்திய அரசு நிறுத்தியதால் பெற்றோர்கள் அலுவலக நுழைவாயில் முன் காத்திருப்புப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
வெலிங்டன் கன்டோண்மென்ட் நிர்வாகத்தின் கீழ் தமிழ்வழிக் கல்வியில் பத்தாம் வகுப்பு வரையும், சின்ன வண்டிச்சோலைப் பகுதியில் ஆங்கில வழிக் கல்வி 9-ஆம் வகுப்பு வரையிலும் என 2 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் 700-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்ல நிர்வாகம் சார்பில் இலவசமாக 16 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், இந்த ஆண்டு இலவச பேருந்து சேவை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசின் பாதுகாப்புத் துறை திடீரென்று அறிவித்தது. இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து பேருந்து வசதி வழங்கக்கோரி கடந்த 10 நாள்களுக்கும் மேலாக கன்டோண்மென்ட் அலுவலகத்தில் பெற்றோர்கள் மனு கொடுத்து வந்தனர்.
இந்நிலையில், அவர்கள் கன்டோண்மென்ட் நுழைவாயில் முன் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர். மாலை வரை கன்டோண்மென்ட் முதன்மை அதிகாரி வராததால் போராட்டத்தை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து கன்டோண்மென்ட் போர்டு துணைத் தலைவர் பாரதியார் கூறுகையில்,
"இப்பிரச்னை குறித்து புணே, தில்லியில் உள்ள கன்டோண்மென்ட் உயரதிகாரிகளிடம் பேசியுள்ளோம். இலவசப் பேருந்துக்காக ஆண்டுக்கு கோடிக் கணக்கில் செலவு செய்ய முடியாது என்று அவர்கள் கூறிவிட்டதால், பொதுமக்கள் பாதிக்காத வகையில் இப்பிரச்னைக்கு சுமூக
முடிவு விரைவில் எடுக்கப்படும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com