காட்டெருமை தாக்கியதில் இருவர் படுகாயம்

மஞ்சூர் அருகே மஞ்சக்கம்பை கிராமத்தில் காட்டெருமை தாக்கியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் பலத்த காயமடைந்தனர்.

மஞ்சூர் அருகே மஞ்சக்கம்பை கிராமத்தில் காட்டெருமை தாக்கியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் பலத்த காயமடைந்தனர்.
மஞ்சூர் அருகே மஞ்சக்கம்பை, நெடுகல்கம்பை, மேலூர் ஒசட்டி, சக்தி நகர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்கள் அடர்ந்த தேயிலைத் தோட்டம், வனப் பகுதியை ஒட்டி அமைந்துள்ளன.
இப்பகுதிகளில் கரடி, காட்டெருமை, காட்டுப் பன்றி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் குடியிருப்பு, விளை நிலங்களுக்குள் நுழைந்து சேதப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், மேல்டெரேமியா கிராமத்தைச் சேர்ந்த கனகரத்தினம் மகன் அனந்தராஜ் (24), அதே கிராமத்தைச் சேர்ந்த செல்லன் ஆகியோர் தங்களது கிராமத்துக்கு மஞ்சக்கம்பை வழியாக இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தனர். அப்போது, பீர்குண்டு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது தேயிலைத் தோட்டத்தில் இருந்த காட்டெருமைகள் திடீரென இவர்களைத் தாக்க முயன்றது.
அதிர்ச்சியடைந்த இருவரும் சப்தம் போட்டுள்ளனர். அருகிலிருந்தவர்கள் ஓடிவந்து காட்டெருமையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். பின்னர், சுமார் அரை மணி நேரம் போராடி காட்டெருமையை வனப் பகுதிக்குள் விரட்டினர். இதையடுத்து, காயமடைந்த இருவரையும் மீட்டு ஆருக்குச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கிருந்து உயர் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த குந்தா வனச் சரகர் ராமச்சந்திரன், வனவர் சசிதரன், வனக் காப்பாளர் சிவகுமார், வனக் குழுவினர் காட்டெருமைகளை அடர்ந்த வனப் பகுதியில் விரட்டினர்.

காட்டெருமை அச்சத்தில் ஓடி கீழே விழுந்தனர்: உதகை தாவரவியல் பூங்காவில் இரு பெண்கள் காயம்

உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் காட்டெருமை அச்சத்தில் ஓடிய இரு பெண்கள் கீழே விழுந்ததில் காயமடைந்தனர்.
சென்னையைச் சேர்ந்தவர்கள் தனலட்சுமி (39), சித்ரா (36). இவர்கள் இருவரும் உதகையில் நடைபெறும் மலர்க்காட்சியைக் காண உதகை வந்திருந்தனர். சனிக்கிழமை காலை, இவர்கள் பூங்காவின் மேல் பகுதியிலுள்ள டாப் கார்டன் பகுதியில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென எருமை ஒன்று வந்துள்ளது.
அதை காட்டெருமை என்று கருதிய பெண்கள் இருவரும் அலறியபடி ஓடியுள்ளனர். அப்போது இருவரும் கீழே விழுந்ததில் தனலட்சுமியின் காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. சித்ராவுக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன.
பெண்களின் அலறல் கேட்டு வந்த சுற்றுலாப் பயணிகள் அளித்த தகவலால், அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், அவர்களை மீட்டு உதகை அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு எக்ஸ்-ரே கருவி வேலை செய்யாததால், இருவரும் ஒரு தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற பின், மேல் சிகிச்சைக்காக கோவை சென்றனர்.
காட்டெருமை அல்ல: ஆனால் பெண்கள் கண்டது காட்டெருமை அல்ல என்று தோட்டக்கலைத் துறையினர் தெரிவித்தனர். இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது:
பெண்கள் இருவரும் சென்று புகைப்படம் எடுத்த பகுதிக்கு அருகில் தோடரின மக்களின் குடியிருப்பு உள்ளது. அங்கு வளர்க்கப்படும் எருமையைப் பார்த்து காட்டெருமை என அவர்கள் நினைத்திருக்கலாம்.
அந்த எருமை பெண்களைத் தாக்கவில்லை. அவர்கள்தான் அச்சத்தால் ஓடிக் கீழே விழுந்து காயமடைந்துள்ளனர் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com