அல்லஞ்சியில் 180 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி பூமி பூஜையுடன் தொடக்கம்

உதகையை அடுத்துள்ள அல்லஞ்சி பகுதியில் ரூ.20 கோடி மதிப்பில் 180 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான பணிகளை தமிழக உள்ளாட்சித்


உதகையை அடுத்துள்ள அல்லஞ்சி பகுதியில் ரூ.20 கோடி மதிப்பில் 180 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான பணிகளை தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.
அல்லஞ்சி கிராமத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் ரூ.20 கோடி மதிப்பில் 180 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணி தொடக்க விழா நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று புதிய வீடுகள் கட்டும் திட்டப் பணிகளை பூமி பூஜை செய்து தொடக்கி வைத்தார். பின் அவர் பேசியதாவது:
அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணிகளில் குன்னூர் வட்டத்தில் 172 குடியிருப்புகள் ரூ.18.68 கோடி மதிப்பீட்டில் கட்ட கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதனைத் தொடர்ந்து அல்லஞ்சி பகுதியில் ரூ.19.71 கோடி மதிப்பீட்டில் 180 குடியிருப்புகள் கட்டும் பணிக்கான பூமி பூஜை தற்போது நடத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ரூ.2.1 லட்சம் அரசு மானியத்துடன் பயனாளிகள் தாங்களே வீடு கட்டிக் கொள்ளும் திட்டத்தின்கீழ் உதகை நகராட்சியில் ரூ.64.83 கோடி மதிப்பீட்டில் 2,161 குடியிருப்புகளும், குன்னூர் நகராட்சியில் ரூ.18.27 கோடி மதிப்பீட்டில் 609 குடியிருப்புகளும், கூடலூர் நகராட்சியில் ரூ.28.17 கோடி மதிப்பீட்டில் 939 குடியிருப்புகளும், நெல்லியாளம் நகராட்சியில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் 500 குடியிருப்புகள் என மொத்தம் ரூ.126.27 கோடி மதிப்பீட்டில் 4,209 குடியிருப்புகளுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.
நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜுணன், மக்களவை உறுப்பினர் சி.கோபாலகிருஷ்ணன், குன்னூர் சட்டப் பேரவை உறுப்பினர் சாந்தி ராமு, குடிசை மாற்று வாரிய கண்காணிப்புப் பொறியாளர் ராஜசேகரன், செயற்பொறியாளர் குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com