உதகையில் 16,17-ஆம் தேதிகளில் சுற்றுலாப் பொங்கல்

உதகையில் ஜனவரி 16, 17-ஆம் தேதிகளில் சுற்றுலாப் பொங்கல் கொண்டாடப்படுவதாக சுற்றுலாத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

உதகையில் ஜனவரி 16, 17-ஆம் தேதிகளில் சுற்றுலாப் பொங்கல் கொண்டாடப்படுவதாக சுற்றுலாத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உள்ளதைப்போல அறுவடையோ அல்லது கால்நடைகளுக்கோ அதிக அளவிலான முக்கியத்துவம் இல்லாத மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் பிற மாவட்டங்களில் உள்ளதைப் போல முழுமையாக கொண்டாடப்படுவதில்லை.
இருப்பினும், பொங்கல் பண்டிகைக்கான தொடர் விடுமுறைக் காலம் என்பதால் சுற்றுலாப் பயணிகளின் கூடுதலான வருகையைக் கருத்தில் கொண்டு சுற்றுலாத் துறை சார்பில் மாவட்ட நிர்வாகம் ஆண்டுதோறும் சுற்றுலாப் பொங்கலைச் சிறப்பித்து வருகிறது.
இதில், இந்த ஆண்டில் ஜனவரி 16, 17-ஆம் தேதிகளில் உதகையில் உள்ள படகு இல்லத்தில் சுற்றுலாப் பொங்கலைக் கொண்டாடுவது எனவும், இதில் தப்பாட்டம், கரகம், காவடி, நையாண்டி, கிராமிய நிகழ்ச்சிகள், பழங்குடியினர், படகர் இன மக்களின் நடனம், பரதநாட்டிய நிகழ்ச்சிகளை நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள அறிக்கை:
சுற்றுலாப் பொங்கல் நிகழ்ச்சிகளின் மூலம் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பதோடு, உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் அதிக அளவில் ஈர்க்க முடியும் என்பதால் இந்த ஆண்டுக்கான சுற்றுலாப் பொங்கல் நிகழ்ச்சிகளை மிகச் சிறப்பாகக் கொண்டாட தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பொங்கல் திருநாளையொட்டி உதகையில் மலர், பழங்கள், கரும்பு ஆகியவற்றின் விலை பலமடங்கு அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை வரை முழம் ரூ. 50-க்கு விற்கப்பட்ட மல்லிகை சனிக்கிழமை முழம் ரூ. 120-க்கும், ரூ.50-க்கு விற்கப்பட்ட கரும்பு ரூ. 100-க்கும் விற்கப்பட்டது. பழங்களின் விலையும் பலமடங்கு அதிகரித்துள்ளது.
இருப்பினும், கடந்த ஒரு வாரமாக அரசுப் பேருந்து வசதி இல்லாததால் உதகை நகருக்கு வந்து செல்ல முடியாத நிலையிலிருந்த கிராம மக்கள் கூடுதல் விலையைக் கொடுத்து தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கிச் செல்ல உதகையில் குவிந்துள்ளதால் உதகையில் மக்கள் நடமாட்டம் மட்டுமின்றி, வாகனப் போக்குவரத்தும் பலமடங்கு அதிகரித்துள்ளது. அதேபோல, தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com