குந்தா வனச் சரகத்தில் அனுமதியின்றி  வெட்டிக் கடத்தப்படும் நகா மரங்கள்: நடவடிக்கை எடுக்க பொது மக்கள்  வலியுறுத்தல்

மஞ்சூர் அருகில் உள்ள குந்தா வனச் சரகத்தில் நகா மரங்கள் வெட்டிக் கடத்தப்படுவதைக் கண்டுகொள்ளாத வனத் துறை

மஞ்சூர் அருகில் உள்ள குந்தா வனச் சரகத்தில் நகா மரங்கள் வெட்டிக் கடத்தப்படுவதைக் கண்டுகொள்ளாத வனத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், குந்தா வனச்சரத்தில் 4 ஹெக்டருக்கும் அதிகமான வனப் பகுதி உள்ளது. அது மட்டுமின்றி தனியார் தேயிலைத் தோட்டங்களும் உள்ளன. இங்கு சீகை, கற்பூரம், சில்வர் ஓக், பைனஸ், நகா உள்ளிட்ட பல்வேறு வகையான காட்டு மரங்கள் வளர்ந்துள்ளன. 
இதில், குந்தா வனச் சரகத்தில் கீழுர், கெத்தை, தாய்சோலை, மீக்கேரி, பிக்கட்டி, முள்ளிகூர், அதிகரட்டி, மேலூர் உள்ளிட்ட வனப் பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கிருந்து வனத் துறையினரின் உரிய அனுமதியின்றி மரங்களை மர்ம நபர்கள் வெட்டிக் கடத்தி வருகின்றனர். மேலூர், ஆறுக்குச்சி கைகாட்டி, தங்காடு, பிக்கட்டி, குந்தா, தாய்சோலை, பெங்கால்மட்டம், மேல்குந்தா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் சில்வர் ஓக், கற்பூரம், சீகை, பைனஸ் உள்ளிட்ட மரங்கள் வனத் துறையினரின் உத்தரவுடன் ஒரு சில இடங்களில் வெட்டப்பட்டு வருகின்றன. 
இதில், ஒருசிலர் வனத் துறையினரிடம் பட்டா நிலங்களில் 10, 15 மரங்களுக்கு மாதத்தில் ஒரு நாள் மட்டும் அனுமதி பெற்று வெட்டுகின்றனர். இந்த ஒரு அனுமதியை மட்டும் வைத்து கொண்டு மஞ்சூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பல்வேறு இடங்களில் வனத் துறையினரின் அனுமதியின்றி மரங்களை வெட்டிக் கடத்தி வருகின்றனர். இதற்கு வனத் துறையில் ஒருசில அதிகாரிகள் லஞ்சம் பெற்று கொண்டு மரக் கடத்தல்காரர்களுக்கு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். 
இதில் மேலூர், கைகாட்டி, ஆறுக்குச்சி, பெங்கால்மட்டம், மீன்மலை உள்ளிட்ட பகுதிகளில் வனத் துறை அனுமதியின்றி மர வியாபாரிகள் நகா மரங்களை வெட்டிக் கடத்தி சேலாஸ், தூதூர்மட்டம், மஞ்சூர், கைகாட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மர அறுவை ஆலைகளில் கொடுத்து பலகைகளாக மாற்றிக் கொள்ளை லாபம் ஈட்டி வருகின்றனர். ஆனால் வனத் துறையினரிடம் அனுமதி பெறும் நில உரிமையாளர்களும், எஸ்டேட் நிர்வாங்களும் ஒரு மரத்தை வெட்டினால் ஒரு மரம் நடவு செய்ய வேண்டும் என்ற விதியை மாற்றி, வெட்டுவதோடு மட்டுமே விட்டுவிடுகின்றனர். 
எனவே, சம்பந்ததப்பட்ட வனத் துறை அதிகாரிகள், குந்தா வனச் சரகத்தில் அனுமதியின்றி வெட்டப்பட்டு வரும் நகா மரங்களைப் பாதுகாக்க வேண்டுமென அப்பகுதிக மக்கள் வலியுறுத்தியுள்ளனர். 
இதுகுறித்து, வனத் துறை அதிகாரிகள் கூறியதாவது: 
குந்தா வனச் சரகத்தில் பெரும்பாலும் சீகை, பைனஸ், கற்பூரம், சில்வர் ஓக் மரங்கள் மட்டுமே அதிக அளவில் உள்ளன. இதில், கைகாட்டி -  மஞ்சக்கம்பை சாலை, பிக்கட்டி-முள்ளிகூர்  சாலை, தங்காடு-எடக்காடு சாலை உள்ளிட்ட பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட அரிய வகையிலான காட்டு மரங்கள்அதிக அளவில் உள்ளன. இதில், மஞ்சூர்-கெத்தை சாலையில் சந்தன மரங்களும் அடங்கும். 
இதில், அனுமதி பெற்று வெட்டப்படும் ஒவ்வொரு மரத்துக்கும் வனத் துறைக்கு ரூ. 100 டெபாசிஸ்ட் பணம் செலுத்த வேண்டும். இதில் வெட்டிய மரங்களுக்கு பதிலாக அந்த இடத்தில் புதியதாக மரக்கன்றுகள் நடவு செய்ய வேண்டும். அவ்வாறு நடவு செய்து பராமரிக்கப்பட்டு வந்த மரங்களை வனத் துறையினர் 3 ஆண்டுகள் கழித்து  ஆய்வு செய்து உரிய முறையில் பராமரித்து வந்தால் அந்தத் தொகை திரும்பி சம்பந்தப்பட்டவர்களிடம் அளிக்கப்படும்எ ன கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com