போலி கல்விச் சான்றிதழ் விவகாரம்: உதகை அரசு கல்லூரி உதவி பேராசிரியர்கள் இருவர் கைது

உதகை அரசு கலைக் கல்லூரியில் போலிச் சான்றிதழ் கொடுத்து பணி வாய்ப்பு பெற்ற விவகாரம் தொடர்பாக புகாருக்கு 

உதகை அரசு கலைக் கல்லூரியில் போலிச் சான்றிதழ் கொடுத்து பணி வாய்ப்பு பெற்ற விவகாரம் தொடர்பாக புகாருக்கு உள்ளான  உதவி பேராசிரியர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
 நீலகிரி மாவட்டம், உதகை அரசு கலைக் கல்லூரியில் தாவரவியல் துறையில் பணியாற்றி வந்த உதவி பேராசிரியர்களான நாகேந்திரன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் கல்விச் சான்றிதழ்களில் சந்தேகம் இருப்பதாக கல்லூரிக் கல்வி இயக்குநரகம் தெரிவித்திருந்த சந்தேகத்தின் பேரில் அந்த கல்விச் சான்றிதழ்கள்ஆய்வு செய்யப்பட்டன. அப்போது அவர்கள் பெற்றிருந்த ஆராய்ச்சிக்கான சான்றிதழ்கள் பிகார் மாநிலம், பாட்னாவிலுள்ள ஒரு பல்கலைக்கழகத்திலிருந்து போலியாக பெறப்பட்டவை என தெரியவந்தது.
 இதையடுத்து கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் உத்தரவின்பேரில் சம்பந்தப்பட்ட 2 உதவி பேராசிரியர்கள் மீதும் உதகை அரசு கலைக் கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி கடந்த வாரத்தில் உதகை நகர உதவிக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் தெரிவித்திருந்தார். அந்தப் புகாரின்பேரில் கடந்த வியாழக்கிழமை உதகை நகர காவல் நிலையத்தில் வழக்கும் பதியப்பட்டது.  அதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். 
இந்நிலையில், இப்பிரச்னையில் தொடர்புடைய நாகேந்திரன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.  அவர்கள் இருவரும் உதகை நீதித்துறை நடுவர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் உதகை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
 போலி கல்விச் சான்றிதழ் விவகாரம் தொடர்பாக  உதகை அரசு கலைக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்களாகப் பணியாற்றி வந்த மூவர் ஏற்கெனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com