கேரட் கழுவும் தண்ணீரை மறுசுழற்சி செய்ய வேண்டும்: விவசாயிகள் எதிர்பார்ப்பு

உதகையில் கேரட் கழுவும் இயந்திரங்களால் தினமும் சுமார் 40 லட்சம் லிட்டர் வரை வீணாகும் தண்ணீரை மறுசுழற்சி செய்ய வேண்டும் என விவசாயிகள் கூறுகின்றனர்.
கேரட் கழுவும் தண்ணீரை மறுசுழற்சி செய்ய வேண்டும்: விவசாயிகள் எதிர்பார்ப்பு

உதகையில் கேரட் கழுவும் இயந்திரங்களால் தினமும் சுமார் 40 லட்சம் லிட்டர் வரை வீணாகும் தண்ணீரை மறுசுழற்சி செய்ய வேண்டும் என விவசாயிகள் கூறுகின்றனர்.
 தமிழகத்தின் தண்ணீர்த் தொட்டி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் நிகழாண்டில் கடுமையான தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. விவசாயத்திற்கு மட்டுமின்றி குடிநீருக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
 இத்தகைய நிலையில், உதகையில் கேரட் கழுவும் இயந்திரங்களால் தண்ணீர் பெருமளவுக்கு விரயமாகிறது. உதகையைப் பொருத்தமட்டில் 37 கேரட் கழுவும் இயந்திரங்கள் இயங்கி வருகின்றன. நாளொன்றுக்கு சராசரியாக 40 லட்சம் லிட்டர் வரை நிலத்தடி நீர் பயன்படுத்தப்பட்டு கேரட் கழுவப்படுகிறது. இந்த இயந்திரங்கள் சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள நிலையில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் 50 சதவீத மானியத்தின் அடிப்படையில் ரூ.50 லட்சத்திற்கும் குறைவாகவே விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
 இந்த இயந்திரங்களில் கேரட் கழுவுவதற்கு மூட்டைக்கு ரூ. 50 வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. நாளொன்றுக்கு 1,000 மூட்டைகள் வரை கேரட் கழுவப்படுகிறது.
 கேரட் கழுவும் இயந்திரங்கள் அனைத்துமே தாழ்வான மற்றும் ஆடா எனப்படும் பள்ளத்தாக்குப் பகுதிகளிலேயே அமைக்கப்பட்டுள்ளன. இதனால், மலைப் பகுதிகளிலிருந்தும், மேட்டுப்பாங்கான பகுதிகளிலிருந்தும் வரும் தண்ணீர் அனைத்தும் தாழ்வான பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறுகள் மூலமாக கேரட் கழுவும் இயந்திரங்களால் உறிஞ்சப்படுகிறது.
 நிலத்தடி நீர் மாசுபடுகிறது: உற்பத்திக்கு பிறகு விலை உயர்ந்த பூச்சிக் கொல்லி மருந்துகளால் கேரட் கழுவப்படுவதால் அதிலிருந்து வெளியேறும் தண்ணீர் மீண்டும் நிலத்திற்குள்ளேயே செல்கிறது. இதனால், நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. கேரட் கழுவுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட தண்ணீர் விஷத்தன்மை கொண்டதாக மாறிவிடுகிறது. அதை வேறு பயன்பாட்டிற்குப் பயன்படுத்த முடியாத நிலையுள்ளது.
 இப்பிரச்னை தொடர்பாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிடம் விவசாயிகள் புகார் மனுக்கள் அளித்துள்ளனர். அதையடுத்து, கேரட் கழுவும் இயந்திரங்களிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை பிற பயன்பாட்டுக்கும், குடிநீருக்கும் பயன்படுத்தவே முடியாது என்பதால் இத்தகைய இயந்திரங்களுக்குத் தடை விதிக்கப்படும் என்றும், எனவே, கேரட் விவசாயிகளுக்கு ஜூலை 15ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்படுகிறது என்றும் அதற்குள் விவசாயிகள் உரிய முடிவெடுக்க வேண்டும் என ஏற்கெனவே தெரிவித்திருந்தார். ஆனால், ஜூலை 15ஆம் தேதி முடிவடைந்த பின்னரும் இதுவரையிலும் எத்தகைய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
 கேரட் பளபளப்புக்குக் காரணம்: கேரட் பயிருக்கு விவசாயிகள் செலவழிக்கக்கூடிய தொகை மிகவும் கூடுதலாகும். ஏக்கருக்கு ஒரு கிலோ கேரட் விதை தேவைப்படும் நிலையில் ஒரு கிலோ கேரட் விதையின் விலை குறைந்தபட்சம் ரூ. 50,000 ஆகும். பூச்சிக்கொல்லி மருந்துகள், உரம் உள்ளிட்ட பிற தேவைகளுக்காக கூடுதலாக ரூ.50,000 வரை செலவழிக்கப்படுகிறது. அதனால், கேரட் விளைந்தவுடன் ஏக்கருக்கு குறைந்தது ரூ.1.5 லட்சம் கிடைத்தால்தான் விவசாயிகள் லாபமடைய முடியும். அதனால், கேரட் பயிரை நிலத்திலிருந்து எடுத்தவுடனேயே விலை உயர்ந்த பூச்சிக்கொல்லி மருந்துகளின் துணையுடன் அவை கழுவப்பட்டு உடனடியாக சந்தைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. விற்பனையாகும் வரை கேரட் உரிய பளபளப்புடன் இருக்கும் வகையிலேயே தயார் செய்கின்றனர்.
 நீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்த வேண்டும்: கேரட் விவசாயிகள், கேரட் கழுவும் இயந்திரங்களுக்கு எதிரானவர்களல்ல எனவும், இந்த இயந்திரங்களுக்குப் பயன்படுத்தும் தண்ணீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்தினால் நிலத்தடி நீரைப் பயன்படுத்தும் அளவு குறையும் என்பதற்காகவே விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவிப்பதாக அப்புக்கோடு பகுதியின் முன்னோடி விவசாயியும், சமூக ஆர்வலருமான ராமமூர்த்தி தெரிவித்தார்.
 இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
 நீலகிரி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கேரட் பயிரிடப்படுவதில்லை. தண்ணீர் வசதியுள்ள இடங்களில் மட்டும் பயிரிடப்படுகின்றன. உதகை , அதன் சுற்றுப்பகுதிகளில் மட்டும் தற்போது சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில் கேரட் பயிரிடப்பட்டுள்ளது. இதில் 10,000 விவசாயிகள் வரை ஈடுபட்டுள்ளனர். 4 மாத பயிரான கேரட் விளைவிக்கப்படும் காலத்தில் நிலத்தடி நீர் அதிக அளவில் உபயோகப்படுத்தப்படுகிறது. அதைத்தவிர விற்பனைக்கு கொண்டு செல்லும்போதும் ஏராளமான தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. இதற்கான தண்ணீர்அனைத்துமே நிலத்தடி நீராகும். கேரட் கழுவும்போது வெளியேறும் கழிவுநீரை மற்ற பயிர்களுக்குப் பயன்படுத்தும்போது அழுகல் நோயும், பூஞ்சை நோயும் ஏற்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
 அதனாலேயே, கேரட் கழுவுவதற்குப் பயன்படுத்தப்படும் நிலத்தடி நீரின் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் ஏற்கெனவே கேரட் கழுவப் பயன்படுத்திய நீரையே சேமித்து, அதை மறுசுழற்சியின் மூலம் மீண்டும் கேரட் கழுவப் பயன்படுத்தலாம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com