சிமி மீதான தடை குறித்து தீர்ப்பாயத்தில் விசாரணை தொடக்கம்

சிமி எனப்படும் இந்திய மாணவர்  இஸ்லாமிய அமைப்பு மீதான தடையை நீடிப்பதா, நீக்குவதா என்பது குறித்த விசாரணை தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி முக்தா குப்தா தலைமையிலான தீர்ப்பாயத்தில் குன்னூரில்


சிமி எனப்படும் இந்திய மாணவர்  இஸ்லாமிய அமைப்பு மீதான தடையை நீடிப்பதா, நீக்குவதா என்பது குறித்த விசாரணை தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி முக்தா குப்தா தலைமையிலான தீர்ப்பாயத்தில் குன்னூரில் சனிக்கிழமை துவங்கியது. இந்த விசாரணை இன்னும் இரு நாள்களுக்கு நடைபெறுகிறது.
இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (சிமி) 1977-இல் துவங்கப்பட்டது. இந்த அமைப்பு பல்வேறு நாசகரச் செயல்களில் ஈடுபட்டதை அடுத்து மத்திய அரசால் தடை செய்யப்பட்டது. இந்த அமைப்பின் மீதான தடை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. கடைசியாக 2014-இல் ஐந்தாண்டு தடை நீட்டிப்பு வழங்கப்பட்டது. 
இந்தத் தடை உத்தரவு, கடந்த ஜனவரி 31-ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்தது.இதையடுத்து, சிமி அமைப்பின் மீதான தடை நீட்டிக்கப்படுமா என்பது குறித்து தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி முக்தா குப்தா தலைமையிலான தீர்ப்பாயம் விசாரிக்கிறது. மூன்று நாள்களுக்கு நடைபெறும் இந்தத் தீர்ப்பாய விசாரணை, நீலகிரி மாவட்டம், குன்னூரில், நகராட்சிக் கூட்ட அரங்கில் சனிக்கிழமை துவங்கியது. இதில் குஜராத், ஜார்க்கண்ட், தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசத்தைச்  சேர்ந்த குற்றப் பிரிவு, பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு, மாநில உளவுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சிமி அமைப்பினர் மீது ஏற்கெனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அவர்கள் மீதான தடை விலக்கப்பட்டால் தேச விரோதச் செயல்களில் அவர்கள் ஈடுபடும் அபாயம் உள்ளதாகவும் தீர்ப்பாயம் முன்பு காவல் துறை அதிகாரிகள் விளக்கினர். 
இதில் 6 மனுக்கள் பெறப்பட்டன. அரசுத் தரப்பில் கூடுதல்  சொலிசிட்டர் ஜெனரல்  பிங்கி ஆனந்த் ஆஜரானார். இந்து  அமைப்புகள் சார்பில் வழக்குரைஞர் எல்.சந்திரசேகர் ஆஜரானார். சிமி தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. இரண்டாம் நாள் விசாரணை ஞாயிற்றுக் கிழமையும் நடைபெற உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com