குன்னூர் தேயிலை ஏல மையத்தின் காலாண்டு வருவாய் ரூ. 26.84 கோடி அதிகரிப்பு!

இந்த ஆண்டுமுதல் காலாண்டில் தேயிலை ஏல மையத்தின் வருமானம், கடந்த காலாண்டை விட  ரூ. 26 கோடியே 84 லட்சம்

இந்த ஆண்டுமுதல் காலாண்டில் தேயிலை ஏல மையத்தின் வருமானம், கடந்த காலாண்டை விட  ரூ. 26 கோடியே 84 லட்சம் அதிகரித்துள்ளதாக, சர்வதேச மேலாண்மை ஆலோசகர் சுந்தர் தெரிவித்துள்ளார். 
குன்னூர் தேயிலை வர்த்தகர் அமைப்பு சார்பில், குன்னூரில் தேயிலை ஏல மையம் செயல்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் தேயிலைத் தூள் குன்னூர் தேயிலை ஏல மையம் மூலமாக பிற மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஏலத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தகர்கள் கலந்துகொண்டு தேயிலைத் தூளை கொள்முதல் செய்கின்றனர். 
இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையுள்ள முதல் காலாண்டில் தேயிலை ஏல மையத்தின் வருமானம்  அதிகரித்துள்ளது. இதுகுறித்து சர்வதேச மேலாண்மை ஆலோசகர் சுந்தர் கூறியதாவது: 
இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான  முதல் காலாண்டில் தேயிலை ஏல மையத்தின் வருவாய் சென்ற காலாண்டை விட ரூ. 26.84 கோடி அதிகரித்துள்ளது. ஒரு கிலோ தேயிலைத் தூளுக்கு ரூ.  7.40 கூடுதலாக விலை கிடைத்துள்ளது. மேலும் 18 லட்சம் கிலோ தேயிலைத் தூள் கடந்த ஆண்டு காலாண்டை விட கூடுதலாக விற்பனையாகியுள்ளது. 
கடந்த ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதிமுதல் வட மாநிலங்களில் தேயிலை உற்பத்தியை நிறுத்துமாறு தேயிலை வாரியம் உத்தரவிட்டது. வட மாநிலங்களில் நிலவும் பனிப்பொழிவு காரணமாக பச்சைத் தேயிலை மகசூல் குறைவடைந்து தேயிலைத் தூள் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும்.  அதை சமண்செய்ய தரமற்ற தேயிலைத் தூளை கலப்படம் செய்து சந்தைக்கு சிலர் கொண்டு வருகின்றனர். அதைக் கட்டுப்படுத்தவே தேயிலை வாரியம் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தது. இதனால் குளிர்காலத்தில் வட மாநில தேயிலைத் தூள் ஏலத்துக்கு வரவில்லை. இதையடுத்து வட மாநில விற்பனையாளர்கள் தங்கள் வர்த்தகத் தேவைக்காக தென் மாநில ஏல மையங்களில் தேயிலைத் தூளை அதிக அளவு கொள்முதல் செய்வதில் ஆர்வம் காட்டினர்.  
நீலகிரி மாவட்டத்தில் குளிர்காலத்தில் உற்பத்தியாகும் ஆர்தோடக்ஸ் ரக தேயிலைத் தூள் அதிக விலைக்கு விற்பனையானது. மேற்கண்ட காரணங்களால் இந்த ஆண்டு முதல் காலாண்டில் நடந்த 13 ஏலங்களில் தேயிலைத் தூளின் சராசரி விலை கிலோ ஒன்றுக்கு சராசரியாக ரூ. 100.19 ஆக இருந்தது. இந்த விலை கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ. 92.79 ஆக இருந்தது. 
தேயிலைத் தூளின் தேவை அதிகரிப்பு காரணமாக விற்பனையின் அளவு 1 கோடியே 37 லட்சம் கிலோவாக இருந்தது. கடந்த ஆண்டு முதல் காலாண்டில் 1 கோடியே 19 லட்சம் கிலோ விற்பனையானது. எனவே அதிக அளவு தேயிலைத் தூள் விற்பனையாகி உள்ளது. தவிர, அதிக விலையும் கிடைத்துள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com