"வனப் பகுதிகளை ஒட்டியுள்ள நிலங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்'

நீலகிரி மாவட்டத்தில் வனப் பகுதிகளை ஒட்டியுள்ள விளைநிலங்களுக்கு இரவு நேரங்களிலும்,

நீலகிரி மாவட்டத்தில் வனப் பகுதிகளை ஒட்டியுள்ள விளைநிலங்களுக்கு இரவு நேரங்களிலும், அதிகாலை நேரங்களிலும் செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என வனத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
இது தொடர்பாக நீலகிரி மாவட்ட வனத் துறையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: 
நீலகிரி மாவட்டத்தில் வனப் பகுதிகளை ஒட்டியுள்ள இடங்களில் இரவு நேரங்களிலும், அதிகாலை நேரங்களிலும்  விளைநிலங்களை காவல் காக்கும் பணிகளில்  இளைஞர்களை மட்டுமே ஈடுபடுத்த வேண்டும். விளைநிலங்களுக்கு போதிய வெளிச்சம் இருக்கும்போதே சென்று திரும்பிவிட வேண்டும். இரவு நேரங்களிலும், அதிகாலை நேரங்களிலும்  வனப் பகுதிகளுக்கு  அருகிலுள்ள  விளைநிலங்களுக்குத் தனியாக செல்வதை தவிர்க்க வேண்டும். வனப் பகுதிகளை ஒட்டியுள்ள பகுதிகளில் திறந்தவெளி கழிப்பிடங்களாக பயன்படுத்துவதை தவிர்ப்பதோடு,  வீட்டுக் கழிவுகள், உணவுக் கழிவுகள் மற்றும் இதரக் கழிவுகளை  அருகாமையில் உள்ள குப்பைத் தொட்டிகளில் மட்டுமே கொட்ட வேண்டும்.  வனத்துக்குள்ளோ அல்லது அருகாமையில் உள்ள பொது இடங்களிலோ கொட்டக் கூடாது. 
இரவு நேரங்களில் வெளியில் செல்லும்போது டார்ச் லைட் போன்ற உபகரணங்களை உடன் எடுத்துச் செல்ல வேண்டும். வனப் பகுதிகளின் அருகில் உள்ள விவசாயிகள் தங்கள் நிலங்களில் பழ வகை நாற்றுகளைப் பயிரிடுவதால் பழங்களின் வாசனையை நுகர்ந்து அறுவடைக் காலங்களில் வன விலங்குகள் வர வாய்ப்புள்ளதால் அச்சமயங்களில் வன விலங்குகளின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதோடு, வன விலங்குகள் தென்பட்டால் உடனடியாக வனத் துறையின் இலவச எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
அதேபோல, வன விலங்குகளை ஈர்க்கும் பயிர்களை தவிர்த்து மாற்றுப் பயிர்களை பயிரிடவும் விவசாயிகள் முன்வர வேண்டும். பிளாஸ்டிக் பொருள்களை வனப் பகுதிகளுக்குள் வீசுவதும் தண்டனைக்குரிய குற்றமாகும். விளைநிலங்கள் மற்றும் வனப் பகுதிகளை ஒட்டியுள்ள கிராமப் பகுதிகளில் நடமாடும்போது வன விலங்குகள் தென்பட்டால்  அவற்றை துன்புறுத்தும் செயலிலோ அல்லது  அவற்றுடன் சுயபடம் எடுக்கும் முயற்சிகளிலோ ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
அதேபோல, சட்ட விரோதமாக மின்வேலி அமைப்பதும்,  மின்வேலி அமைக்க  உதவுவதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.  வன விலங்குகளை துன்புறுத்துவதும், தொந்தரவு செய்வதும் தண்டனைக்குரிய குற்றங்கள் என்பதால் வன விலங்குகளின் நடமாட்டத்தை அறிந்தால் உடனடியாக  வனத் துறையின் 1800-4253968  என்ற 24 மணி நேர இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com