வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

நீலகிரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
  இது தொடர்பாக  ஆட்சியர் தெரிவித்துள்ளதாவது:
   வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பொதுப் பிரிவு மனுதாரர்களில் பதிவு செய்து 5 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளி பதிவுதாரர்களில் ஒரு வருடமும் அதற்கு மேலும் காத்திருப்பவர்களுக்கு  உதவித் தொகை அளிக்கப்பட்டு வருகிறது. பொதுப் பிரிவில் பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ரூ. 200,  பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்களுக்கு  மாதம் ரூ. 300,  பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி மற்றும் அதற்குச் சமமான பட்டதாரிகளுக்கு மாதம் ரூ. 400,  முதுநிலை பட்டதாரிகளுக்கு மாதம் ரூ. 600 அளிக்கப்படுகிறது. 
  மாற்றுத் திறனாளிகள் பிரிவில்  பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு கீழ் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ரூ. 600,  பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி அல்லது அதற்கு சமமான பட்டதாரிகளுக்கு  மாதம் ரூ. 750,  முதுகலைப் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000  வழங்கப்படுகிறது. 
 இதற்கான தகுதிகளாக 31.12.2018இல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து ஆண்டுகள் பூர்த்தியடைந்திருக்க வேண்டும். மாற்றுத் திறனாளி மனுதாரர்கள் ஒரு வருடத்தினை கடந்திருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட , பழங்குடியினருக்கு 45 வயதிற்குள்ளும்,  இதர வகுப்பினருக்கு வயது வரம்பு 40க்குள்ளும் இருக்க வேண்டும்.  வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும். மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு வயது உச்சவரம்பும், குடும்ப ஆண்டு வருமானமும் ஏதும் இல்லை. பொதுப் பிரிவு மனுதாரர்களுக்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 50,000க்குள் இருக்க வேண்டும்.
  விண்ணப்பதாரர் எந்தவொரு கல்வி நிலையத்திலும் முழுநேர மாணவராக இருக்கக் கூடாது.  இத்திட்டத்தின் கீழ் ஏற்கெனவே மூன்றாண்டுகள் பயனடைந்த பயனாளியாகவும் இருக்கக் கூடாது. அரசு  அல்லது  தனியார் துறையிலோ, சுய வேலை வாய்ப்பிலோ ஈடுபடுபவராக  இருத்தல் கூடாது. பள்ளி அல்லது கல்லூரிக் கல்வியினை முழுவதுமாக தமிழகத்தில் முடித்திருக்க வேண்டும்.  பெற்றோர் அல்லது  கணவர் அல்லது மனைவி அல்லது பாதுகாவலருடன் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்திருக்க வேண்டும். 
  இத்தகைய தகுதியுள்ள பதிவுதாரர்களில் இதுவரை விண்ணப்பம் பெறாதவர்கள் உடனடியாக மாவட்ட  வேலைவாய்ப்பு அலுவலகத்தினை அணுகலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com