கொடநாடு விவகாரம்: சயன், மனோஜுக்கு லுக் அவுட் நோட்டீஸ்

கொடநாடு கொலை, கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான சயன், மனோஜ் ஆகிய இருவரும்

கொடநாடு கொலை, கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான சயன், மனோஜ் ஆகிய இருவரும் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
கொடநாடு எஸ்டேட்டில் நிகழ்ந்த கொலை, கொள்ளை  தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட 10  பேரில் முக்கிய
எதிரிகளாக  சயன், மனோஜ் ஆகிய இருவரும் உள்ளனர்.  இருவரும் இணையதள ஆசிரியரான மேத்யூ சாமுவேல் வெளியிட்ட ஆவணப் படத்தில் கொடநாட்டில் நிகழ்ந்த கொலை, கொள்ளைச் சம்பவங்கள் குறித்து தெரிவித்திருந்தனர்.
கொடநாடு வழக்கில் சாட்சிகளை திசைதிருப்பும் வகையில் சயன், மனோஜ் ஆகியோர் கருத்துத் தெரிவித்து வருவதால் இவர்களது  ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என உதகை நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞர் பாலநந்தகுமார் மனு தாக்கல் செய்திருந்தார்.  இது தொடர்பான வழக்கில்  கடந்த 2ஆம் தேதி விசாரணை நடைபெற்றபோது சயன், மனோஜ் நேரில் ஆஜராகவில்லை. மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய தீபு, பிஜின் ஆகியோரும் ஆஜராகவில்லை. இதையடுத்து இவ்வழக்கை வரும் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்த மாவட்ட நீதிபதி வடமலை, நீதிமன்றத்தில் ஆஜராகாத நால்வருக்கும் பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு நால்வரையும் போலீஸார் தேடி வந்தனர். 
இதில், கேரள மாநிலம், திருச்சூர் பகுதியில் தீபு, பிஜின் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை பிடிபட்டனர்.  இவர்கள் இருவரும் உதகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.  இந்நிலையில், சயன், மனோஜ் ஆகியோர் குறித்து எந்த தகவலும் கிடைக்காமலுள்ளது. இருவரின் செல்லிடப்பேசிகளும் கேரளத்திலுள்ள அவர்களது வீட்டின் சிக்னலையே காட்டுவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இவர்கள் இருவரும் ரயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் ஏறி பல்வேறு ஊர்களிலும் சுற்றி வருவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதற்கிடையே சயன், மனோஜ் ஆகியோர் ரயில் மூலம்  உத்தரப் பிரதேச மாநிலத்துக்குச் சென்று அங்கிருந்து கோரக்பூர் வழியாக நேபாளத்துக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என்ற தகவலும் கிடைத்துள்ளது. இது குறித்து தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
இந்நிலையில், கொடநாடு சம்பவங்கள் தொடர்பான வழக்கு விசாரணை இம்மாதம் 18ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், சயன், மனோஜ் ஆகிய இருவரும் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்று விடாமலிருக்க அவர்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியாவிடம் கேட்டபோது, லுக் அவுட் நோட்டீஸ் செவ்வாய்க்கிழமை மாலை விடுவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக அவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வது தடுக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com