ஜென்ம நிலத்தில் வசிக்கும் பொது மக்கள், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது: ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா விளக்கம்

கூடலூர் ஜென்ம நிலத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா விளக்கமளித்துள்ளார். 

கூடலூர் ஜென்ம நிலத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா விளக்கமளித்துள்ளார். 
இப் பிரச்னை தொடர்பாக வியாழக்கிழமை நடைபெற்ற விளக்கமளிக்கும் கூட்டத்தில் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பேசியதாவது:
கூடலூர், பந்தலூர் பகுதியில் உள்ள ஜென்ம நிலத்தில் ஏற்கனவே வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 17 ஆயிரம் ஏக்கர் வனத்தை, ஒதுக்குக் காடாக மாற்றி தமிழக சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தச் சட்ட நடவடிக்கை என்பது ஜென்ம நிலப் பிரச்னையை எளிமைப்படுத்தும் நோக்கத்தில் அரசு எடுத்த முடிவாகும்.
அந்த ஜென்ம நிலத்தில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 34 ஆயிரம் பேர் வாழ்ந்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குத் தற்போது பிரிவு-17 ன் நிலப் பிரச்னைக்குத் தீர்வு காண தமிழக அரசு துரித நடவடிக்கை எடுத்து வருகிறது. முதல் கட்டமாக பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.10 கோடி செலவில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 1,134 வீடுகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மின்சாரம், குடிநீர், சாலை போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.
ஜென்ம நிலம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள குழு நான்கு முறை வரவழைக்கப்பட்டு ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பிலும் இரண்டு முறை உச்ச நீதிமன்றத்தை நாடி நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், உச்சநீதிமன்றத்தால் ஏற்படுத்தப்பட்ட குழுவிடம் 17 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான வனத்தை ஒப்படைக்க வேண்டும். அதன் பிறகு அனைத்து நிலமும் அரசின் கட்டுப்பாட்டுக்கு வரும். அதன் பிறகுதான் ஜென்ம நிலத்தில் வாழும் 34 ஆயிரம் மக்களின் நீண்ட காலப் பிரச்னை முடிவுக்கு வரும். முதலில் வனத்தை ஒப்படைக்க வேண்டும். மாறாக புதிய ஆக்கிரமிப்புகள் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டால் ஒட்டுமொத்த நடவடிக்கையும் வீணாகிவிடும். பிரச்னைக்கு தீர்வு காண முடியாது. 
ஜென்ம நிலத்தில் வாழும் மக்களும் சிறு, குறு விவசாயிகளும் அச்சப்பட தேவையில்லை. அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் நிலப் பிரச்னை கையாளப்படுகிறது. இதுகுறித்து தவறான தகவல்களைப் பரப்பி பொதுமக்கள் மத்தியில் பீதியை கிளப்புபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இக் கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் ராகுல், கோட்டாட்சியர் ராஜ்குமார், காவல் துணை கண்காணிப்பாளர் ஜெய்சிங் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com