தெப்பக்காடு: யானைகளுக்கான புத்துணர்வு முகாம் திடீர் ஒத்திவைப்பு

முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் திங்கள்கிழமை தொடங்க இருந்த

முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் திங்கள்கிழமை தொடங்க இருந்த 48 நாள் யானைகள் புத்துணர்வு நலவாழ்வு முகாம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்கள், வனத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு யானைகள் முகாம்களில் உள்ள யானைகளுக்கும் ஆண்டுதோறும் புத்துணர்வு நலவாழ்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தப் புத்துணர்வு முகாம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு பகுதியிலேயே நடத்தப்பட்டு வந்த சூழலில் சமவெளிப் பகுதிகளிலிருந்து முதுமலைக்கு யானைகளைக் கொண்டு வருவதில் ஏற்பட்ட சிரமங்களின் காரணமாக  மேட்டுப்பாளையத்தில் தேக்கம்பட்டி பகுதியில் கடந்த சில ஆண்டுகளாகத் தனியார் மற்றும் கோயில் யானைகளுக்கான முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதில், நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காட்டில் உள்ள யானைகள் முகாமில் இருக்கும் யானைகளுக்குத் தெப்பக்காட்டிலேயே முகாம் நடத்தப்பட்டது.
இந்நிலையில், தேக்கம்பட்டியில் தனியார் மற்றும் கோயில் யானைகளுக்கான புத்துணர்வு நலவாழ்வு முகாம் கடந்த டிசம்பர் 18 இல் தொடங்கி ஜனவரி 31 வரை நடத்தப்பட்டது. ஆனால், அதே நேரத்தில் முதுமலையில் தொடங்க வேண்டிய அரசு வளர்ப்பு யானைகளுக்கான முகாம் குறித்து எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில், தெப்பக்காட்டில் உள்ள வளர்ப்பு  யானைகளுக்கான முகாம் பிப்ரவரி 18ஆம் தேதி முதல் 48 நாள்களுக்கு நடத்தப்பட உள்ளதாகத்  தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த முகாமை தமிழக வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திங்கள்கிழமை மாலை 5 மணிக்குத் தொடங்கிவைப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இத்திட்டத்தில் தற்போது திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு தொடர்புடைய அரசுத் துறை அலுவலர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பப்பட்டுள்ளது. அதில் தெப்பக்காட்டில் திங்கள்கிழமை தொடங்க இருந்த வளர்ப்பு யானைகளுக்கான புத்துணர்வு நலவாழ்வு  முகாம் அரசின் வேறு சில அத்தியாவசியப் பணிகள் காரணமாக 2 நாள்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு புதன்கிழமை  மாலை தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com