யானைகளைப் பாதுகாக்க வலியுறுத்தி உதகையில் விழிப்புணர்வுப் பேரணி
By DIN | Published On : 25th February 2019 10:32 AM | Last Updated : 25th February 2019 10:32 AM | அ+அ அ- |

உதகை: ஆசிய யானைகளைப் பாதுகாக்க வலியுறுத்தி உதகையில் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
ஆசிய யானைகளை சர்வதேசப் பாரம்பரிய விலங்காக அறிவிக்கப்பட்ட பின்னர் இந்திய வன உயிரின அறக்கட்டளை, மத்திய சுற்றுச்சூழல், வனத் துறை அமைச்சகம், தமிழக வனத் துறை ஆகியவற்றின் சார்பில் ஆசிய யானைகளைப் பாதுகாப்போம் என்ற தொடர் விழிப்புணர்வுப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், இது தொடர்பாக கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மத்திய வனத் துறை அமைச்சகத்தால் இது தொடர்பாக தில்லியில் விழிப்புணர்வுப் பிரசாரம் தொடங்கி வைக்கப்பட்டது. இதில், யானைகள் வாழும் அனைத்து மாநிலங்களிலும், யானைகளின் வழித்தட நிலங்கள் அமைந்துள்ள மாநிலங்களின் வழியாகவும் இந்த விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக, கோவையில் கடந்த 2ஆம் தேதி தமிழக வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த விழிப்புணர்வு ஊர்வலம் சனிக்கிழமை உதகை வந்தடைந்து. முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள தெப்பக்காடு யானைகள் முகாமை ஞாயிற்றுக்கிழமை சென்றடைந்தது வாகனப் பிரசார ஊர்வலம். அங்கு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கான சுற்றுச்சூழல் சார்ந்த புகைப்படக் கண்காட்சியும், யானைகளைப் பாதுகாக்க வலியுறுத்தும் ஓவியப் போட்டிகளும் நடத்தப்பட்டன.
அதைத் தொடர்ந்து, யானைகளின் வழித்தடப் பகுதிகள் அமைந்துள்ள ஓவேலி, கூடலூர், கார்குடி, தேவாலா, ஆனைகட்டி ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை யானைகளின் வலசைப் பாதை தொடர்பான விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.
மாவட்டத்தில் இதன் நிறைவு நிகழ்ச்சி உதகை அரசு கலைக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. இதில், விடியல் பிரபாகரன் குழுவினரின் கிராமிய பாட்டிசைப் பாடலுடன் கூடிய யானைகள் விழிப்புணர்வு தெருக்கூத்து நடைபெறும். இந்நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை இந்திய வன உயிரின அறக்கட்டளையின் சார்பில் ஓசை சுற்றுச் சூழல் அமைப்பின் தலைவர் காளிதாஸன், பேராசிரியர் ராம்குமார், உதகை அரசுக் கலைக் கல்லூரி பேராசிரியர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் செய்துள்ளனர்.