குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் தண்ணீர்த் தட்டுப்பாடு: நோயாளிகள் அவதி
By DIN | Published On : 09th June 2019 02:59 AM | Last Updated : 09th June 2019 02:59 AM | அ+அ அ- |

குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் 15 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் கிடைப்பதால் நோயாளிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த அரசு லாலி மருத்துவமனையில் குன்னூர், அருகில் உள்ள கிராமப்புறப் பகுதிகளில் உள்ள நோயாளிகள் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 15 நாள்களாக நகராட்சி சார்பாக வழங்கப்படும் தண்ணீர் முறையாக வழங்கப்படாததால் நோயாளிகள் குடிக்கத் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர். பிரசவ வார்டு, குழந்தைகள் தங்கும் அறைகள், கழிவறைகளில் போதுமான தண்ணீர் இல்லாததால் உள்நோயாளிகள் வீடுகளுக்குத் திரும்பும் அவலமும் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நகராட்சி அதிகாரிகள், மருத்துவமனை நிர்வாகத்துக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று நோயாளிகளின் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே, அவசர அவசியம் கருதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகள் வலியுறுத்தி உள்ளனர்.