கலப்படத் தேயிலை தூள் உற்பத்தியில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: படுக தேச பார்ட்டி வலியுறுத்தல்

கலப்படத் தேயிலை தூள் உற்பத்தியில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து  சிறையில் அடைக்க வேண்டும்

கலப்படத் தேயிலை தூள் உற்பத்தியில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து  சிறையில் அடைக்க வேண்டும் என்று  படுக தேச  பார்ட்டி நிறுவனத்  தலைவர்  மஞ்சை மோகன் வலியுறுத்தியுள்ளார்.  
இதுகுறித்து  அவர் மேலும் தெரிவித்ததாவது:
நீலகிரி மாவட்டத்தில் விளையும் தேயிலையை நம்பி 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர்.  குறிப்பாக படக இன மக்களில் பெரும்பாலானவர்கள் தேயிலைத் தொழில் செய்து வருகின்றனர். பச்சைத் தேயிலைக்கு  உரிய  விலைக் கிடைக்காமல்  விவசாயிகள் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  
இந்நிலையில் நீலகிரியில் சில தனியார் தேயிலைத் தொழிற்சாலைகள் சமீப காலமாக கலப்பட தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டு வருவது அம்பலமாகி உள்ளது. கோத்தகிரியில் 5 டன் கலப்படத் தேயிலைத் தூள் கடந்த மே 24 ஆம் தேதி பிடிபட்டது.  இதே போல ஒரு தனியார் தேயிலை தொழிற்சாலையில் 40 டன் கலப்படத் தேயிலை தூள் ஜூன் 14  ஆம் தேதி பறிமுதல் செய்யப்பட்டது. கலப்படத் தேயிலை உற்பத்தி காரணமாக தேயிலைத் தொழில் வெகுவாக பாதிக்கப்பட்டு வருவதுடன், தேயிலைக்கு நல்ல விலை கிடைக்காமல் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதே நிலை தொடர்ந்தால், நீலகிரியில் தேயிலைத் தொழில் அழியும் சூழல் ஏற்படும். எனவே, கலப்பட தேயிலை தூள் உற்பத்தியில் ஈடுபடும்  தொழிற்சாலைகளுக்கு "சீல்' வைத்து அவற்றை நிரந்தரமாக மூட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை வேண்டும். 
மேலும் அதற்கு காரணமானவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com