"பாண்டியாற்றில் உற்பத்தியாகி வீணாகும் தண்ணீரை பவானி ஆற்றுக்குத் திருப்ப வேண்டும்'
By DIN | Published On : 24th June 2019 09:25 AM | Last Updated : 24th June 2019 09:25 AM | அ+அ அ- |

கூடலூர் அருகே பாண்டியாறில் உற்பத்தியாகி கேரளம் வழியாகச் சென்று கடலில் கலக்கும் தண்ணீரை பவானி ஆற்றுக்குத் திருப்பிவிட வேண்டும் என்று நீலகிரி மாவட்ட மவுண்டாடன் செட்டி சமுதாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இச்சங்கத்தின் ஆலோசகர் சி.ஆர்.கிருஷ்ணன் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
நீலகிரி மாவட்டத்தில் கூடலூருக்கு அருகே உற்பத்தியாகும் பாண்டியாற்றில் இருந்து தண்ணீர் கேரளம் வழியாகச் சென்று வீணாகக் கடலில் கலக்கிறது. இதைத் தடுத்து சுமார் 1,000 டேங்கர் லாரிகள் மூலமாகத் தண்ணீரை உற்பத்தியாகும் இடத்திலிருந்தே எடுத்து சுமார் 10 கி.மீ. தொலைவிலுள்ள புத்தூர்வயல் என்ற இடத்தில் ஊற்றுவதற்கு ஏற்பாடு செய்தால், அங்கிருந்து தண்ணீர் மாயாறு வழியாகப் பாய்ந்து பவானிசாகர் அணையைச் சென்றடையும்.
அங்கு தண்ணீரை திறந்துவிட்டால் ஈரோட்டிற்குச் செல்லும் . அங்கிருந்து சென்னை, வட மாவட்டங்களுக்கு ரயில் மூலம் கொண்டு செல்லலாம். இதன் மூலமாகத் தண்ணீர்த் தேவையை ஓரளவுக்கு நிவர்த்தி செய்ய முடியும்.
தற்போது நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவ மழைக் காலம் என்பதால் பாண்டியாறு நீராதாரப் பகுதிகளில் அதிக அளவில் தண்ணீர் வரத்து உள்ளது. தண்ணீர் வீணாகக் கடலில் சென்று கலப்பதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.