நீலகிரி மாவட்டத்தில் நீர்நிலைகள் குறித்து ஆய்வு: தமிழ்நாடு ஏற்றுமதி துறை துணைத் தலைவர் நீரஜ் மிட்டல் வருகை
By DIN | Published On : 25th June 2019 05:57 AM | Last Updated : 25th June 2019 05:57 AM | அ+அ அ- |

நீலகிரி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள தமிழ்நாடு ஏற்றுமதி துறை துணைத் தலைவர் நீரஜ் மிட்டல் தலைமையில் குழு ஒன்று வருகை தந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள எமரால்டு, ரேலியா அணைகள் உள்ளிட்ட நீராதாரங்களின் நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ள வந்துள்ள குழுவினர், குன்னூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இதில் கலந்துகொண்ட நீரஜ் மிட்டல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள ரேலியா அணையின் கொள்ளளவை அதிகரிக்க முடியாது. கூடுதலாக தடுப்பணை கட்டி தண்ணீரைச் சேமிக்க அரசுக்கு திட்ட மதிப்பீடு வழங்கப்பட உள்ளது.
தற்போது நீலகிரி மாவட்டத்தில் தண்ணீர்ப் பற்றாக்குறை இல்லை. தண்ணீர் விநியோகம் செய்யும் குழாய்கள் பழுதடைந்துள்ள காரணத்தால் அவற்றை சீர்செய்ய ரூ. 54 லட்சம் நிதி கோரப்பட்டுள்ளது. நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீரஜ் மிட்டல் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், குன்னூர் கோட்டாட்சியர் ரஞ்சித் சிங் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.