வனப் பகுதியில் ரேடியோ காலர் மீட்பு: முதுமலை புலிகள் காப்பகத்துக்குள் விடப்பட்ட விநாயகன் யானையை தேடும் வனத் துறையினர்
By DIN | Published On : 01st May 2019 07:04 AM | Last Updated : 01st May 2019 07:04 AM | அ+அ அ- |

முதுமலை புலிகள் காப்பகத்துக்குள் கொண்டு வந்து விடப்பட்ட விநாயகன் யானையை அப்பகுதியில் காணாததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வனப் பகுதிக்குள் கிடந்த ரேடியோ காலரை மட்டும் மீட்டுள்ள வனத் துறையினர் விநாயகன் யானையை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் சின்ன தடாகம் பகுதிகளில் பொதுமக்களை தாக்கியும், பயிர்களை அழித்தும் வந்த விநாயகன் என்ற காட்டு யானையை கும்கி யானைகளின் உதவியுடன் வனத் துறையினர் பிடித்து முதுமலை புலிகள் காப்பகப் பகுதிக்குள் விட்டனர்.
மேலும் அதன் நடமாட்டத்தைக் கண்காணிக்க யானையின் கழுத்தில் ரேடியோ காலரை பொருத்தி கண்காணித்து வந்தனர். முதுமலைக்குள் விடப்பட்ட நேரத்தில் கர்நாடக மாநில எல்லைக்குள் புகுந்த அந்த யானை மீண்டும் முதுமலைக்கு திரும்பியதோடு, யாருக்கும் எந்த இடையூறும் செய்யாமல் முதுமலை வனப் பகுதிக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருந்தது. இந்நிலையில் யானை விநாயகன் கழுத்தில் மாட்டப்பட்டிருந்த ரேடியோ காலரிலிருந்து கடந்த 2 நாள்களாக சிக்னல் எதுவும் கிடைக்கவில்லை.
அதையடுத்து வனத் துறையினர் விநாயகன் நடமாடும் பகுதிகளாக கருதப்பட்ட வனப் பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ரேடியோ காலர் மட்டும் தனியாக கிடந்தது. ஆனால், அப்பகுதியில் விநாயகனைக் காணவில்லை.
இதனால் அது மீண்டும் குடியிருப்புப் பகுதிகளுக்குள்ளோ அல்லது விளை நிலங்கள் நிறைந்த பகுதிகளுக்குள்ளோ நுழைந்திருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் விநாயகனை தேடும் பணியில் வனத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மீண்டும் தடாகம் வனப் பகுதிக்குள் விநாயகன் வந்து விடுமோ என்ற அச்சத்தில் தமிழக-கேரள எல்லைப் பகுதிகளிலும் வனத் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.