உலிக்கல் பேரூராட்சியில் தரமில்லாமல் அமைக்கப்படும் தடுப்புச் சுவர்: பொதுமக்கள் குற்றச்சாட்டு
By DIN | Published On : 06th May 2019 03:04 AM | Last Updated : 06th May 2019 03:04 AM | அ+அ அ- |

குன்னூர், உலிக்கல் பேரூராட்சியில் தடுப்புச் சுவர் கட்டும் பணி தரமில்லாமல் நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
உலிக்கல் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சாலை சீரமைப்புப் பணிகள் அண்மையில் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து அரசுப் பள்ளி பகுதியில் இருந்து குறிப்பிட்ட தூரம் வரை சாலையோரத்தில் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டு வருகிறது ஆனால் இந்த தடுப்புச் சுவர் தரமில்லாமல் அமைக்கப்படுகிறது. சாலையோர மண் திட்டுகளை அகற்றியதில் உள்ள கற்களை வைத்து பெயரளவுக்கு சிமென்ட் பூசப்பட்டுள்ளது.
இதனால், மழைக் காலங்களில் இடிந்து விழுவதுடன், வாகன போக்குவரத்தும் தடைபடும் சூழ்நிலை உள்ளது.
இவ்வழியாக தினமும் உலிக்கல் பேரூராட்சிக்கு அதிகாரிகள், அரசு ஊழியர்கள் சென்று வந்தாலும், தரமில்லாமல் அமைக்கும் தடுப்புச்சுவர் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.
எனவே, அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து தரமான முறையில் தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.