சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூல்: சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி

குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகே நெடுஞ்சாலையோரங்களில் நிறுத்தும் வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் சுற்றுலாப் பயணிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.

குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகே நெடுஞ்சாலையோரங்களில் நிறுத்தும் வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் சுற்றுலாப் பயணிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.
சிம்ஸ் பூங்கா அருகே நெடுஞ்சாலையோரத்தில் நிறுத்தப்படும் வாகனங்களில் காருக்கு ரூ.3, வேனுக்கு ரூ.5, பேருந்துக்கு ரூ.10 என நகராட்சி நிர்வாகம் கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது.
இதில் கட்டணம் வசூலிக்கும் பணி ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒப்பந்ததாரர் குறைந்தபட்சமாக ரூ.70 முதல் அதிகபட்சமாக ரூ.150 வரை முறைகேடாக கட்டணம் வசூலிக்கின்றனர். 
இது குறித்து தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த உமாசங்கர் கூறியதாவது:
குன்னூர் சிம்ஸ் பூங்காவுக்கு வாகனத்தில் வரும் சுற்றுலாப் பயணிகளிடம் வேன் உள்ளிட்ட  பெரிய வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணமாக ரூ.150 வசூலிப்பதுடன், போலீஸாருக்கு கொடுக்க வேண்டும் என்று கூடுதலா ரூ.100 என மொத்தம் ரூ.250 வரை வசூலிப்படுகிறது. 
இதில் காவல் துறைக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான சாலையின்யோரத்தில் பாதுகாப்பு இல்லாமல் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு நகராட்சி நிர்வாகம் எவ்வாறு கட்டணம் வசூலிக்க முடியும்.
இந்தக் கட்டணக் கொள்ளையால் சிம்ஸ் பூங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக  சிம்ஸ் பூங்காவுக்கு வருவதை சில சுற்றுலா வாகன ஓட்டிகள் தவிர்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால், சுற்றுலாத் தொழிலை நம்பியுள்ள நூற்றுக்கு மேற்பட்டவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 
இது குறித்து நகராட்சி வருவாய்  அதிகாரி நாராயணணிடம் கேட்டபோது, கூடுதல் கட்டணம்  வசூலிப்பதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்காக அச்சடித்து வைத்துள்ள ரசீதுகள் ஒப்பந்ததாரரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், தொடர்ந்து முறைகேடாக கட்டணம் வசூலித்தால் ஒப்பந்தப்புள்ளி ரத்து  செய்யப்படும்.
இது குறித்து சிம்ஸ்பார்க் பகுதியில் உள்ள புறக்காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
வாகன நிறுத்துவதற்கான கட்டண விவரங்கள் மற்றும் புகார் குறித்து தகவல் தெரிவிக்க தொலைபேசி எண் விவரம் அடங்கிய அறிவிப்பு பலகை நிறுவ வேண்டும் என சுற்றுலாப்  பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com