உதகையில் வனத்துறை சார்பில் புகைப்படக் கண்காட்சி தொடக்கம்: மே 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது
By DIN | Published On : 15th May 2019 07:47 AM | Last Updated : 15th May 2019 07:47 AM | அ+அ அ- |

உதகையில் கோடை சீசனையொட்டி சுற்றுலாத் துறையின் ஒத்துழைப்புடன் வனத் துறையின் புகைப்படக் கண்காட்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
உதகை, சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள தோட்டக்கலைத் துறை வளாகத்தில் வனத் துறை, சுற்றுலாத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள இக் கண்காட்சியை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
ஆண்டுதோறும் கோடை விழாவை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இம்மாவட்டத்தைப் பற்றி அறிந்துகொள்ளும் வகையில் இந்த புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
இதில் நீலகிரி மாவட்டத்தின் அடையாளமாக விளங்கும் தாவரங்கள், விலங்குகள், பழங்குடியின மக்களின் வரலாறு, வாழ்க்கை முறை போன்றவை குறித்த புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.
மேலும் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் காணப்படும் தாவர வகைகள், ஆர்கிட் மலர்கள் போன்றவைகளும், பூச்சிகள், இருவாழ்விகள், ஊர்வன, பறவைகள், பாலூட்டிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இக்கண்காட்சியில் யானைகளின் வாழ்க்கை முறை, அவற்றின் பாதுகாப்பு, பிரச்னைகள் ஆகியவற்றை விளக்கும் புகைப்படங்கள், தொட்டபெட்டா மருத்துவ தாவரங்கள் மேம்பாடு பகுதி, தமிழ்நாடு தேயிலை தோட்டக்கழகம் மற்றும் சூழல் சுற்றுலா மேம்பாட்டு குழுவின் வேலைப்பாடுகள் குறித்த புகைப்படங்கள் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. இதில் சிறப்பம்சமாக பதப்படுத்தப்பட்ட விலங்குகளைக் கொண்டு மாதிரி காடு உருவாக்கப்பட்டுள்ளது.
வனத் துறை, இந்திய வனவிலங்கு அறக்கட்டளையினரால் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இக்கண்காட்சி வரும் 31ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இக்கண்காட்சியை கண்டு பயனடைய வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் குருசுவாமி, உதவி வனப் பாதுகாவலர் சரவணகுமார், மாவட்ட சுற்றுலா அலுவலர் ஜனார்த்தனம், அரசுத்துறை அலுவலர்கள், சுற்றுலாப் பயணிகள் கலந்து கொண்டனர்.