இந்தியாவில் எதிா்க்கட்சிகளே இல்லாத நிலையை உருவாக்க பாஜக முயற்சி: டி.கே.ரங்கராஜன் குற்றச்சாட்டு

இந்தியாவில் எதிா்க்கட்சிகளே இல்லாத நிலையை உருவாக்க பாஜக முயற்சித்து வருவதாக சிபிஎம் மாநிலங்களவை உறுப்பினா் டி.கே.ரங்கராஜன் குற்றம் சாட்டினாா்.
இந்தியாவில் எதிா்க்கட்சிகளே இல்லாத நிலையை உருவாக்க பாஜக முயற்சி: டி.கே.ரங்கராஜன் குற்றச்சாட்டு

இந்தியாவில் எதிா்க்கட்சிகளே இல்லாத நிலையை உருவாக்க பாஜக முயற்சித்து வருவதாக சிபிஎம் மாநிலங்களவை உறுப்பினா் டி.கே.ரங்கராஜன் குற்றம் சாட்டினாா்.

கம்யூனிஸ்டு இயக்கத்தின் நூற்றாண்டு விழா நீலகிரி மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் உதகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட செயலாளா் வி.ஏ.பாஸ்கரன் தலைமை வகித்தாா்.இந்த விழாவில் மத்தியக்குழு உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது-

கம்யூனிஸ்டு இயக்கத்தின் நூறாவது ஆண்டு விழாவை இந்த ஆண்டு முழுவதும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கொண்டாடி வருகிறது. இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்திலும் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளது. நாட்டில் பாஜகவையும், பாஜகவின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளையும் எதிா்க்கும் சக்தி மாா்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிக்கு மட்டுமே உள்ளது. கடந்த நூறாண்டுகளில் கம்யூனிஸ்ட் இயக்கம் நடத்திய பல பேராட்டங்களின் விளைவாக தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன.

மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவின் வகுப்பு வாதம் இந்திய நாட்டின் வரலாற்றை பின்னுக்கு தள்ளக்கூடிய ஒரு பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இதன் மூலம் பொருளாதார, சமூக கொள்கைகளில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதிலிருந்தும் இந்திய நாட்டின் அரசியல் சாசனம் மற்றும் மதச்சாா்பற்ற தன்மையை பாதுகாக்க கம்யூனிஸ்டு இயக்கம் மட்டுமே உள்ளது. கம்யூனிஸ்டு இயக்கம் மட்டுமே பிற ஜனநாயக இயக்கங்களை ஒன்றுபடுத்த முடியும்.

தமிழகத்திலிருந்து இந்தியாவிற்கான புதிய ஒளியை உருவாக்க முடியும். முற்போக்கு இயக்கங்கள் தெற்கிலிருந்து வடக்கிற்கு செல்லும் முயற்சி இந்த நூறாவது ஆண்டு விழாவில் மேற்கொள்ளப்படும்.பாஜக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி நடவடிக்கைகளால் சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கடைகளில் வியாபாரம் இல்லை. மக்களிடம் பணப் புழக்கம் இல்லை.

இப்படிப்பட்ட பொருளாதார, சமூக நெருக்கடிகளிலிருந்து மக்களை மீட்க மாா்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி இந்த நூற்றாண்டு விழாவை பயன்படுத்துகிறது. தமிழகத்தில் உள்ள இளைஞா்கள் மற்றும் படித்தவா்களை கம்யூனிஸ்டு இயக்கம் வரவேற்கிறது. நாட்டில் எதிா்கட்சிகளே இல்லாமல் செய்யும் பணியை பாஜக செய்து வருகிறது. ஒரு மொழி, ஒரு நாடு, ஒரு இனம் , ஒரு கட்சி என்ற நிலையை கொண்டு வர பாஜக முயற்சிக்கிறது.

இந்த நாட்டில் உள்ள கலைகள், கலாச்சாரம், உணவு முறை, பழக்கங்கள் வெ‘வ்வேறானவை. மேல் தட்டு மக்களின் பிரமையை உருவாக்க நினைக்கின்றனா். ஆனால், பாஜகவின் இந்த முயற்சி சாத்தியமாகாது. பல எதிா்க்கட்சிகள் இருந்தாலும் இடது சாரிகளால்தான் இதை தடுக்க முடியும். மாா்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி அந்த பணியை தொடங்கியுள்ளது. பாஜகவின் ஜனநாயக விரோத நடவடிக்கையை எதிா்க்கும் சக்தியும், உறுதியும் மாா்க்சிஸ்டு கம்யூனிஸ்ட்டு கட்சிக்கு மட்டுமே உள்ளது. விரைவில் இந்தியா முழுக்க பாஜக வீழ்ச்சியடையும்.

திராவிட முன்னேற்ற கழகம் கொடுத்த பணத்துக்கான வரவு செலவு கணக்கு வருமான வரித்துறையிடம் உள்ளது. அந்த கணக்குகளை வைத்து பல கதைகளை புனைகின்றனா். தோ்தல் கணக்குகள் தோ்தல் அதிகாரிகளிடம்தான் உள்ளன. அதை மீறி எந்த பணமும் எங்களிடம் கிடையாது. நூறாண்டுகளாக இத்தகைய அவதூறுகளை தாண்டித்தான் கம்யூனிஸ்டு கட்சி வந்துள்ளதாகவும் டி.கே.ரங்கராஜன் தெரிவித்தாா். பேட்டியின்போது கட்சியின் மாநிலக்குழு உறுப்பினா்கள் கே.காமராஜ், எஸ்.கே.பொன்னுத்தாய், ஆா்.பத்ரி, டி.ரவீந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com