ஆள்குறைப்பு நடவடிக்கையைக் கண்டித்து சுகாதார ஆய்வாளர்கள், ஊழியர்கள் போராட்டம்

ஆள்குறைப்பு நடவடிக்கையைக் கண்டித்து நீலகிரி மாவட்டத்தில் சுகாதாரஆய்வாளர்கள், ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆள்குறைப்பு நடவடிக்கையைக் கண்டித்து நீலகிரி மாவட்டத்தில் சுகாதாரஆய்வாளர்கள், ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
தமிழக சுகாதாரத் துறையில் பணியாற்றும் சுகாதார ஆய்வாளர்களில் 5,600 பணியிடங்களை 2,300 பணியிடங்களாக குறைக்கும் அரசாணைகளை ரத்து செய்யக் கோரியும்,  பதவி உயர்வு அளிக்கப்பட்டிருந்தும் கீழ்நிலைப் பணிகளை மேற்கொள்ள நிர்ப்பந்திப்பதை கைவிடக்கோரியும் செவ்வாய்க்கிழமை இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.  
இதில் தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் நீலகிரி மாவட்ட பிரிவு மற்றும் கூட்டமைப்பின் சார்பில்  அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சுகாதாரத் துறை துணை இயக்குநர் அலுவலகம் ஆகியவற்றில் கருப்பு பட்டை அணிந்து போராட்டங்கள் நடத்தப்பட்டன.
 இதுதொடர்பாக தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் நலச்சங்கத்தின் நீலகிரி மாவட்ட தலைவர் கே.டி.மூர்த்தி தெரிவித்ததாவது:
சுகாதாரஆய்வாளர்கள் தங்களது அனைத்து விதமான பணிகளிலும்  மும்முரமாக இருக்கும்போதே பல்வேறு நோய்கள் பரவி வருகின்றன.  இதில் சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை மேலும் குறைப்பதால் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவர்.  தமிழகத்தில் புயல் நேரங்களில் சுகாதார ஆய்வாளர்களின் பணிகளை பொதுமக்கள் நன்கறிவர். இந்நிலையில் பணியிட குறைப்பை தமிழக அரசு உடனடியாக கைவிடுவதோடு,  3 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு  ஒரு ஆய்வாளர் என்பதை 2 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஒரு ஆய்வாளர் என மாற்ற வேண்டும்.  அத்துடன் 5 வருடம் பணி முடித்த அனைவருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்படுகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com