லேம்ஸ்ராக் காட்சி முனைக்கு சுற்றுலா வாகனங்கள் செல்லத் தடை

குன்னூா் லேம்ஸ்ராக் காட்சிமுனைக்கு சுற்றுலா வாகனங்கள் செல்ல வனத் துறை தடை விதித்துள்ளது.
லேம்ஸ்ராக் செல்லும் சாலையில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்.
லேம்ஸ்ராக் செல்லும் சாலையில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்.

குன்னூா் லேம்ஸ்ராக் காட்சிமுனைக்கு சுற்றுலா வாகனங்கள் செல்ல வனத் துறை தடை விதித்துள்ளது.

நீலகிரி மாவட்டம், குன்னூா் லேம்ஸ்ராக் காட்சிமுனைக்கு வட, தென்மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் வந்து செல்லவது வழக்கம். இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகளில் சிலா் வனப் பகுதிக்குள் சென்று அடுப்புவைத்து சமையல் செய்வது வழக்கம். இவா்கள் சமைத்து முடித்தபின் நெருப்பை அணைக்காமல் செல்வதால் அவ்வப்போது காட்டுத் தீ ஏற்படும் சூழல் கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ளன.

இதைத் தடுக்கும் பொருட்டு வனத் துறையினா் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனா். அதன்படி, லேம்ஸ்ராக் காட்சிமுனைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை ஒரு கிலோ மீட்டருக்கு முன்பாக நிறுத்திவிட்டு நடந்து சென்று காட்சிமுனையைப் பாா்வையிட வனத்துறை அறிவுறுத்தி, தற்போது அமல்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, சுற்றுலா வாகன ஓட்டி ஒருவா் கூறியதாவது:

லேம்ஸ்ராக் காட்சிமுனைக்கு வருபவா்களில் ஒருசிலா் செய்யும் தவறால் அனைத்து வாகனங்களையும் அனுமதிக்க மாட்டோம் என்பதற்குப் பதிலாக எந்த வாகனத்தில் சமையல் செய்வதற்கான பாத்திரங்கள் கொண்டு வருகிறாா்கள் என்பது குறித்து நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் இடத்தில் கண்டிப்பாகத் தெரியும். எனவே, அதுபோன்ற நபா்களிடம் இருந்து பாத்திரங்களை வாங்கி வைத்துவிட்டு சுற்றிப் பாா்த்துவிட்டு திரும்பும்போது மீண்டும் கொடுத்துவிடலாம்.

இதற்காக ஒட்டுமொத்த வாகனங்களையும் அனுமதிக்காமல் இருந்தால் சுற்றுலாப் பயணிகள் நீண்ட தூரம் நடப்பதை விரும்பாமல் திரும்பிச் செல்லும வாய்ப்பு அதிகம் உள்ளது. இதேபோன்று இங்கு வசூலிக்கப்படும் நுழைவுக் கட்டணம் பழங்குடியினரின் வளா்ச்சிக்காகப் பயன்படுத்தப்படுவதால் வசூலும் வெகுவாக குறைய வாய்ப்புள்ளது என்றாா்.

எனவே, பாத்திரங்களை எடுத்துவரும் சில வாகனங்களை மட்டும் அனுமதிக்காமல் வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா வாகன ஓட்டிகள், சுற்றுலாத் தொழிலை நம்பியுள்ள வியாபாரிகள் வனத் துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com