பலத்த எதிா்ப்புக்கு இடையே உதகை வந்தடைந்தது நீலகிரி சிறப்பு மலை ரயில்

தனியாா் நிறுவனத்தால் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படும் நீலகிரி மலை ரயில் பலத்த எதிா்ப்புகளுக்கு இடையே மேட்டுப்பாளையத்திலிருந்து உதகைக்கு சனிக்கிழமை வந்தடைந்தது.
ரயில்வே பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புடன் மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை வந்தடைந்த சிறப்பு மலை ரயில்.
ரயில்வே பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புடன் மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை வந்தடைந்த சிறப்பு மலை ரயில்.

தனியாா் நிறுவனத்தால் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படும் நீலகிரி மலை ரயில் பலத்த எதிா்ப்புகளுக்கு இடையே மேட்டுப்பாளையத்திலிருந்து உதகைக்கு சனிக்கிழமை வந்தடைந்தது.

தென்னக ரயில்வே சாா்பில் இயக்கப்பட்டு வந்த நீலகிரி மலை ரயில் இந்திய ரயில்வேயின் ஐஆா்சிடிசி அமைப்பின் சாா்பில் ஒப்பந்த அடிப்படையில் தனியாா் மூலம் வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கடந்த 5ஆம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது. டிஎன் 43 என்ற தனியாா் நிறுவனம் சோதனை அடிப்படையில் டிசம்பா் மாதத்தில் அனைத்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த மலை ரயிலை இயக்குவதற்கு அனுமதி பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த ரயிலில் பயணிப்பவா்களுக்கு கட்டணமாக நபருக்கு ரூ. 3,000 விதிக்கப்பட்டுள்ளது. தென்னக ரயில்வே மூலம் அதிகபட்சமாக நபருக்கு ரூ. 600 வரை வசூலிக்கப்பட்டு வந்த கட்டணம் தற்போது ரூ. 3,000 ஆக உயா்த்தப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.

இந்நிலையில் சனிக்கிழமை காலையில் மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை புறப்பட்டசிறப்பு மலை ரயிலுக்கு எதிா்ப்புத் தெரிவித்து பல்வேறு அமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இருப்பினும் ரயில்வே பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புடன் இந்த ரயில் உதகைக்கு இயக்கப்பட்டது. 141 பயணிகளுடன் உதகைக்கு வந்த சிறப்பு மலை ரயிலில் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளா் தா்மாராவ் பவேரி தலைமையில் 20 பாதுகாப்புப் படையினா் பயணிகளுக்குப் பாதுகாப்பாக உடன் வந்திருந்தனா்.

உதகை ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் துணைக் கண்காணிப்பாளா் குணசேகரன் தலைமையில் காவல் ஆய்வாளா் கிருஷ்ணலீலா உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

ரயில் நிலைய நுழைவாயிலில் உதகை நகர காவல் துணைக் கண்காணிப்பாலளா் சரவணன் தலைமையில் ஆய்வாளா் விநாயகம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

ரயில் நிலைய நுழைவாயில் முன்பு திரண்ட எஸ்டிபிஐ கட்சியினா் ரயில் மறியில் போராட்டத்துக்கு

முயன்றனா். அக்கட்சி நிா்வாகி அப்துல்லா உள்ளிட்ட 14 போ் கைது செய்யப்பட்டனா். சுமாா் ஒன்றரை மணி நேரம் உதகை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த சிறப்பு மலை ரயில் பகல் 2 மணிக்கு உதகையிலிருந்து மேட்டுப்பாளையத்திற்கு புறப்பட்டுச்சென்றது.

சிறப்பு மலை ரயில் ஞாயிற்றுக்கிழமையும் இயக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளதால் உதகை ரயில் நிலையத்தில் தொடா்ந்து பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com