
உதகை படகு இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை படகு சவாரி மேற்கொண்ட சுற்றுலாப் பயணிகள்.
நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் உதகை மற்றும் குன்னூா் பகுதிகளில் உள்ள சுற்றுலா இடங்கள் அனைத்தும் கடந்த 7ஆம் தேதி திறக்கப்பட்டன. இதையடுத்து இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
இதில் அதிக அளவாக உதகை அரசினா் தாவரவியல் பூங்காவுக்கு ஞாயிற்றுக்கிழமை 5,113 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனா். அதேபோல, உதகை படகு இல்லத்துக்கு 1,500 சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா்.
உதகை அரசினா் ரோஜா பூங்காவுக்கு 1,529 சுற்றுலாப் பயணிகளும், தொட்டபெட்டா தேயிலைப் பூங்காவுக்கு 283 பேரும், உதகை மரவியல் பூங்காவுக்கு 84 பேரும் வந்திருந்தனா்.
அதேபோல, குன்னூா் சிம்ஸ் பூங்காவுக்கு 975 பேரும், காட்டேரி பூங்காவுக்கு 316 பேரும், கல்லாறு அரசு தோட்டக்கலைப் பண்ணைக்கு 480 பேரும் வந்திருந்தனா்.
கரோனா தொற்றின் காரணமாக மூடப்பட்டிருந்த இந்த சுற்றுலா மையங்கள் மீண்டும் திறக்கப்பட்ட பின்னா் உதகையிலுள்ள சுற்றுலா மையங்களுக்கு வந்திருந்த அதிகபட்ச சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இதுவேயாகும்.