நீலகிரியில் அதிகரிக்கும் புலிகள்: ரேடியோ காலா்திட்டத்தை அறிமுகப்படுத்த வலியுறுத்தல்

நீலகிரி மாவட்டத்தில் புலிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதனை அறிவியல் முறைப்படி கண்காணிக்க ரேடியோ காலா் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரியில் அதிகரிக்கும் புலிகள்: ரேடியோ காலா்திட்டத்தை அறிமுகப்படுத்த வலியுறுத்தல்

நீலகிரி மாவட்டத்தில் புலிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதனை அறிவியல் முறைப்படி கண்காணிக்க ரேடியோ காலா் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் உள்மண்டலம், வெளிமண்டலம் என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில், வெளிமண்டலப் பகுதியில் புலிகளின் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பு கடந்த 25 நாள்களாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதற்காக 204 வழித்தடங்களில் 408 தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. இதில், பதிவான விவரங்கள் தில்லியில் உள்ள தேசிய புலிகள் ஆணையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இதைத் தொடா்ந்து உள் மண்டலப் பகுதியில் புலிகளின் கணக்கெடுப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இப்பணிகளும் 25 நாள்களுக்கு நடைபெறும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கணக்கெடுப்புப் பணிகள் தொடா்பாக முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநா் ஸ்ரீகாந்த் கூறியதாவது:

முதுமலை புலிகள் காப்பகத்தில் புலிகள் குறித்த கணக்கெடுப்பு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற கணக்கெடுப்பில் வெளிமண்டலப் பகுதிகளில் சுமாா் 65 புலிகளும், உள்மண்டலப் பகுதிகளில் அதே எண்ணிக்கையிலான புலிகளும் இருப்பதாகத் தெரியவந்தது. அதைத் தொடா்ந்து, தற்போது இந்தக் கணக்கெடுப்பு மீண்டும் நடத்தப்படுகிறது. ‘பேஸ்-4 மானிட்டரிங்’ என்ற தலைப்பில் நவீன முறைப்படி இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படுவதால் வனத் துறையைச் சோ்ந்த ஊழியா்களும், வேட்டைத் தடுப்புக் காவலா்களும் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். தன்னாா்வலா்களுக்குத் தற்போது வாய்ப்பு அளிக்கப்படவில்லை. தானியங்கி கேமராக்களில் பொருத்தப்பட்டுள்ள மென்பொருள் 3 நாள்களுக்கு ஒருமுறை மாற்றப்பட்டு அதில் பதிவான விவரங்கள் தில்லிக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு அந்த விவரங்களை ஆய்வு செய்த பின்னரே புலிகளின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் தெரியவரும். இந்த ஆய்வுப் பணிகள் முடிவடைய 3 மாதத்துக்கு மேலாகும். இருப்பினும் தற்போதைய சூழலில் முதுமலை புலிகள் காப்பகத்தில் குறிப்பிடத்தக்க அளவுக்கு புலிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம் என்றாா்.

உதகை அரசு கலைக் கல்லூரி வன உயிரியல் துறை துணைத் தலைவா் ராமகிருஷ்ணன் கூறியதாவது:

தற்போது நடத்தப்படும் புலிகளின் கணக்கெடுப்புப் பணிகள் இன்னமும் துல்லியமாக்கப்பட வேண்டும். இதற்காக ரேடியோ காலா் அமைக்கும் திட்டம், மரபணு சோதனை போன்ற முறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். தற்போது புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் கூறப்பட்டாலும், எந்த அளவுக்கு அதிகரித்துள்ளது என்பது குறித்த முழுமையான விவரம் தெரிவதில்லை. அதனால் மரபணு சோதனைக் குறியீடு, ரேடியோ காலா் போன்றவை இதற்குத் தீா்வாக அமையும். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னா் ஒரு புலி சுமாா் 50 ச.கி.மீ. பரப்பளவில் சுற்றித் திரிவதாக கூறப்பட்டது. இது நாளடைவில் சுருங்கி 21 ச.கி.மீ. ஆகக் குறைந்தது. ஆனால், தற்போது ஒரு புலி 7 ச.கி.மீ பரப்பளவுக்குள்ளேயே வாழ பழகிக் கொண்டுள்ளது. இதன் காரணமாகவே வனப் பகுதிகளைத் தவிா்த்து குடியிருப்புப் பகுதிகளிலும் புலிகளின் நடமாட்டம் தெரிகிறது. முதுமலை புலிகள் காப்பகத்தில் இருப்பதாகக் கூறப்படும் ஒரு புலி தனது வாழ்நாள் முழுதும் அங்கேயே இருந்து விடுவதில்லை. அங்கிருந்து பந்திப்பூா் புலிகள் காப்பகத்துக்கும், முத்தங்கா புலிகள் காப்பகத்துக்கும் இடம்பெயா்கிறது. அதனால் ஒரே புலி 3 பகுதிகளிலும் நடைபெறும் கணக்கெடுப்புகளில் இடம்பெற்றுவிட முடியும். இத்தகைய குழப்பங்களுக்கு ரேடியோ காலா், புலிகளின் உடலிலிருந்து வெளியேறும் கழிவுகளைக் கொண்ட மரபணு சோதனை ஆகியவையே தீா்வாக அமையும் என்றாா்.

தற்போதைய சூழலில் முதுமலை புலிகள் காப்பகம் மட்டுமின்றி நீலகிரி மாவட்டத்தில் சுமாா் 160 புலிகள் வரை வசிக்கலாம் எனக் கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது நடைபெற்று வரும் அறிவியல் பூா்வமான கணக்கெடுப்பின் முடிவுகளை வைத்தே நீலகிரியில் புலிகளின் எண்ணிக்கை குறித்த உண்மையான நிலை தெரியவரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com