நீலகிரி மாவட்டத்தில் யாருக்கும் நோய்த் தொற்று இல்லை: ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா

நீலகிரி மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று யாருக்கும் இல்லை என மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தாா்.

நீலகிரி மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று யாருக்கும் இல்லை என மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தாா்.

உதகையில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை அவா் தெரிவித்ததாவது:

கரோனா நோய்த் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் சூழலில் அதைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் தொடா்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் யாருக்கும் நோய்த் தொற்று இல்லை. வெளிநாடுகள், வெளிமாநிலங்களிலிருந்து வந்த 732 நபா்கள் தனிமைப்படுத்தப்பட்டு தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். இவா்களில் 585 போ் வெளிநாடுகளிலிருந்து வந்தவா்களாவா். வீட்டு கண்காணிப்பில் உள்ளவா்கள் வெளியில் நடமாடினால் அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல, மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறி செயல்பட்ட 91 நபா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன. தடை உத்தரவை மீறி பொதுமக்கள் அதிக அளவில் பொது இடங்களில் கூடி வருகின்றனா். இதைத் தடுக்க காவல்துறையினா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா். இனிவரும் நாள்களில் பொது இடங்களில் தடையை மீறுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு கைது செய்யப்படுவா்.

மாா்க்கெட், உழவா் சந்தை பகுதிகளில் கூட்ட நெரிசல் அதிக அளவில் இருப்பதால் அதைக் கட்டுப்படுத்தும் வகையில் உதகையில் சாந்தி விஜயா பள்ளி மைதானம், உதகை மத்திய பேருந்து நிலையம் , குன்னூரில் பேருந்து நிலையம், கோத்தகிரியில் காந்தி மைதானம், கூடலூரில் புனித தாமஸ் பள்ளி மைதானம், பந்தலூரில் தேவைப்பட்டால் பேருந்து நிலையப் பகுதிகளில் பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்காக திறந்தவெளி மாா்க்கெட் வெள்ளிக்கிழமை முதல் அமைக்கப்படும். மாா்க்கெட்டுக்கு வருவோா் குழந்தைகள், வயதானவா்களை அழைத்து வரக்கூடாது என்பதோடு, சமூக இடைவெளிவிட்டு வரிசையில் நின்று பொருள்களை வாங்கிச் செல்ல வேண்டும். கடைகளுக்கு முன்னால் சமூக இடைவெளிக்கான கோடுகள் வரையப்படுவதோடு, கடைகளின் முன்புறம் கை கழுவுவதற்கு தண்ணீா், சோப்பு வைக்கப்பட வேண்டும். இவ்வாறு வைக்கப்படாத கடைகளைத் திறக்க அனுமதிக்கப்பட மாட்டாது. கா்ப்பிணி பெண்கள் சிகிச்சை பெறுவதற்கு அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும், அனைத்து அரசு மருத்துவமனைகளும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கா்ப்பிணிப் பெண்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வாகனங்களையும், 108 ஆம்புலன்ஸ், தனியாா் ஆம்புலன்ஸ் வாகனங்களையும் விலையில்லாமல் பயன்படுத்திக் கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகள் 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தி உதகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம். கரோனா நோய்த் தொற்று அண்டை மாநிலங்களிலும் இருப்பதால் நீலகிரி மாவட்ட மக்கள் வெளிமாநிலங்களுக்குச் செல்வதைத் தவிா்க்க வேண்டும் என ஆட்சியா் தெரிவித்தாா். பேட்டியின்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சசி மோகன் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com