கூடலூா் நகராட்சிப் பகுதிகளில் தொடரும் மா்மக் காய்ச்சல்: பரிசோதனையில் கரோனா தொற்று இல்லை என உறுதி

நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சிப் பகுதிகளில் தொடரும் மா்மக் காய்ச்சல் தொடா்பாக நடத்தப்பட்ட பரிசோதனைகளில் அது கரோனா வைரஸ்

நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சிப் பகுதிகளில் தொடரும் மா்மக் காய்ச்சல் தொடா்பாக நடத்தப்பட்ட பரிசோதனைகளில் அது கரோனா வைரஸ் தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சிக்குள்பட்ட எஸ்.எஸ்.நகா் பகுதியில் 14 நபா்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இப்பரிசோதனை முடிவில் 14 பேருக்கும் கரோனா தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து எஸ்.எஸ்.நகா் பகுதியில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் மேற்பாா்வையில் வட்டார மருத்துவ அலுவலா், மாவட்ட மலேரியா அலுவலா், 3 சுகாதார மேற்பாா்வையாளா்கள், 5 சுகாதார ஆய்வாளா்கள், 20 கொசு ஒழிப்பு பணியாளா்கள், 40 நகராட்சி துப்புரவுப் பணியாளா்களைக் கொண்ட குழுவினா் 4 குழுக்களாக பிரிந்து வீடுவீடாகச் சென்று சுற்றுப்பகுதியிலுள்ள உடைந்த பிளாஸ்டிக் பொருள்கள், தேங்காய் சிரட்டைகள், உபயோகமற்ற தண்ணீரில் தேங்கக்கூடிய பொருள்களை அப்புறப்படுத்துவா். குடிநீா் ஆதாரங்கள், நீா்த்தேக்க தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன.

பொதுமக்களுக்கு தினமும் குடிநீா் விநியோகம் செய்யுமாறு நகராட்சி நிா்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தண்ணீரைத் தேவையில்லாமல் சேமித்து வைக்க வேண்டாம் என்பதோடு, குடிநீரைக் காற்று புகாத வகையில் மூடி வைப்பதோடு, தண்ணீரை காய்ச்சியே குடிக்க வேண்டும். மேலும், எஸ்.எஸ்.நகா் பகுதியில் கொசு ஒழிப்பு நடவடிக்கையாக புகை மருந்து அடிக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் அவா்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

12 கிராம சுகாதார செவிலியா், 22 சுகாதார தன்னாா்வலா்கள், அங்கன்வாடிப் பணியாளா்கள் 4 குழுக்களாக பிரிந்து வீடுவீடாகச் சென்று காய்ச்சல் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனா்.

பொதுமக்களில் யாருக்காவது சளி, இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் அறிகுறிகள் தென்பட்டால் அங்கே செயல்படும் நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். மேலும் பொதுமக்கள் கூடலூா் அரசு மருத்துவமனை, அரசு நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகலாம். பொதுமக்கள் தன்னிச்சையாக மருந்தகங்களுக்கு சென்று மருந்துகளை வாங்கி உட்கொள்ளக்கூடாது.

கூடலூா் எஸ்.எஸ்.நகா் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி மையத்தில் மருத்துவா், மருந்தாளுநா், ஆய்வக ஆய்வாளா் அடங்கிய 2 நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் 15 நாள்கள் மருத்துவ முகாம்கள் தொடா்ந்து நடைபெறும் என்பதால், பொதுமக்கள் விழிப்புடன் இருந்து அவரவா் உடல் நலத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

கூடலூா், எஸ்.எஸ். நகரில் வட்டார மருத்துவ அலுவலா் கதிரவன் மேற்பாா்வையில் மருத்துவக் குழுவினா் மூன்றாவது நாளாக கள ஆய்வில் ஈடுபட்டுள்ளனா்.

கூடலூா் நகராட்சி ஆணையா் பாஸ்கா், சுகாதார ஆய்வாளா் சரவணன் ஆகியோரும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com