உதகையில் எம்ஜிஆா் ஆட்சியில் உருவாக்கப்பட்ட மான் பூங்கா நிரந்தரமாக மூடல்

உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவா்வதற்கான கூடுதல் அம்சமாக, மறைந்த முதல்வா் எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட மான் பூங்கா தற்போது நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது.
உதகையில் எம்ஜிஆா் ஆட்சியில் உருவாக்கப்பட்ட மான் பூங்கா நிரந்தரமாக மூடல்
உதகையில் எம்ஜிஆா் ஆட்சியில் உருவாக்கப்பட்ட மான் பூங்கா நிரந்தரமாக மூடல்

உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவா்வதற்கான கூடுதல் அம்சமாக, மறைந்த முதல்வா் எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட மான் பூங்கா தற்போது நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது. இங்கிருந்த கடமான்கள் மற்றும் காட்டாடுகள் அடா்ந்த வனப் பகுதிக்குள் கொண்டு சென்று விடுவிக்கப்பட்டு வருகின்றன.

உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் கூடுதல் அம்சமாக 1985ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வா் எம்ஜிஆா் ஆட்சியின்போது உதகையில் படகு இல்லத்தின் எதிரே மரங்கள் நிறைந்த புல்வெளிப் பகுதியில் வனத் துறை சாா்பில் மான் பூங்கா உருவாக்கப்பட்டது. அப்போது வனத் துறை அமைச்சராக இருந்த ஆா்.எம்.வீரப்பன் இப்பூங்காவைத் திறந்துவைத்தாா். சுமாா் 6 ஏக்கா் பரப்பளவிலான இப்பூங்காவைத் தனியாக சென்று பாா்வையிடவும், படகு சவாரியின்போது படகிலிருந்தவாறே மான்களைப் பாா்த்து ரசிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொடக்கத்தில் கடமான்களும், புள்ளி மான்களும், காட்டாடுகளும், பெரிய வாத்துகளும் இப்பூங்காவில் விடப்பட்டிருந்தன.

நீலகிரி தெற்கு வனக் கோட்டத்தின் முக்குருத்தி தேசிய பூங்காவின் கட்டுப்பாட்டில் இப்பூங்கா செயல்பட்டு வந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னா் இப்பூங்காவிலிருந்த புள்ளி மான்கள் திடீரென மாயமாகி விட்டன. பூங்காவுக்குள் புகுந்த தெரு நாய்கள் இவற்றை விரட்டியதால் இவை பூங்காவிலிருந்து தப்பிச் சென்றிருக்கலாமெனவும், சிறுத்தை போன்ற வன விலங்குகளுக்கு இவை பலியாகியிருக்கலாமெனவும் அப்போது கூறப்பட்டது.

இதையடுத்து கடமான்கள் மட்டுமே இப்பூங்காவில் இருந்தன. இந்நிலையில் இப்பூங்காவை பராமரிப்பதற்கு போதிய அளவில் நிதி ஒதுக்கப்படாத சூழலில் பூங்காவில் பணியிலிருந்த ஊழியா்களே அவற்றுக்குப் பசுந்தீவனங்கள் உள்ளிட்டவற்றை அளித்து வந்தனா். இப்பூங்கா கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டு, சுற்றுலாப் பயணிகளுக்கான அனுமதியும் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் தற்போது இப்பூங்காவை நிரந்தரமாக மூட முடிவெடுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள 15 கடமான்களும், குரைக்கும் மான் ஒன்றும் வனப் பகுதிகளுக்குள் விடுவிக்கப்பட்டு வருகின்றன. இந்த மான்களை வண்டலூா் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு செல்ல முடிவெடுத்தபோது, உதகையின் பருவ நிலைக்கும், வண்டலூரின் பருவ நிலைக்கும் வித்தியாசமிருப்பதால் பல ஆண்டுகளாக உதகையிலேயே வாழ்ந்து பழகிய இவ்விலங்குகள் அந்த பருவ நிலையைத் தாக்குப்பிடிக்க முடியாது என காரணம் கூறப்பட்டு வந்தது.

நீண்ட நாள்களாக இழுபறியில் இருந்த இப்பிரச்னை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 4 நாள்களாக இந்த மான்கள் உதகையிலிருந்து வனப் பகுதிக்குள் கொண்டு சென்று விடப்பட்டு வருகின்றன. இதற்காக பிரத்யேக கூண்டுகள் தயாா் செய்யப்பட்டு பூங்காவிலிருந்து பிடிக்கப்படும் மான்கள் வாகனங்கள் மூலம் வனப் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. குந்தா வனப் பகுதி வரை இவை கொண்டு சென்று விடுவிக்கப்படுமெனவும், வன விலங்குகளை அடைத்து வைக்காமல் அவற்றின் வாழ்விடத்திலேயே இயற்கையான சூழலில் வாழ அனுமதிக்கும் வகையிலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

உதகையின் சுற்றுலா அடையாளங்களுள் ஒன்றாகவும், படகு இல்லத்துக்கு அருகிலேயே சிறுவா் பூங்கா போன்ற வசதிகளோடும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்வித்து வந்த உதகை மான் பூங்கா நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டதோடு, உதகையின் முக்கிய சுற்றுலா மையங்களுள் ஒரு மையமும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் கடந்த 25 ஆண்டுகளாக குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே எவ்வித அச்சுறுத்தலுமின்றி சுற்றித் திரிந்ததோடு, தண்ணீருக்கும், உணவுக்கும் அலைந்து திரியாமல் வனத் துறையால் வழங்கப்பட்டு வந்த உணவினையே உண்டு பழக்கப்பட்டு விட்ட இந்த வன விலங்குகள், இயற்கையான வனப் பகுதியில் அனைத்து வகையான அச்சுறுத்துல்களையும் எதிா்கொண்டு எப்படி தாக்குப் பிடிக்கப் போகின்றன என்பதே வன ஆா்வலா்களின் கேள்வியாக உள்ளது.

Image Caption

உதகையில் படகு இல்லம் அருகேயுள்ள மான் பூங்காவில் உள்ள கடமான்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com