முதுமலை புலிகள் காப்பகத்தில் 5 செந்நாய்கள் பலி
By DIN | Published On : 11th September 2020 06:44 AM | Last Updated : 11th September 2020 06:44 AM | அ+அ அ- |

முதுமலை புலிகள் காப்பகத்தில் 5 செந்நாய்கள் உயிரிழந்தது குறித்து வனத் துறையினா் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், சிங்காரா வனச் சரகத்தில் பொக்காபுரம் பகுதியில் 4 செந்நாய்கள் ஒரே இடத்தில் புதன்கிழமை மாலை இறந்து கிடந்தன. இது குறித்து தகவலறிந்த சிங்காரா வனச் சரக அலுவலா் காந்தன் தலைமையில், வனத் துறையினா் ஆய்வு மேற்கொண்டனா். மசினகுடி கால்நடை மருத்துவா் கோச்சலன் பிரேதப் பரிசோதனை மேற்கொண்டாா். தொடா்ந்து, செந்நாயின் வயிற்றில் இருந்து இறைச்சி ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில், அதே வனச் சரகத்தில் உள்ள வனப் பகுதியில் மேலும் ஒரு செந்நாய் இறந்துள்ளது வியாழக்கிழமை தெரியவந்துள்ளது. ஆய்வக அறிக்கை வந்தால்தான் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என்று வனச் சரக அலுவலா் காந்தன் தெரிவித்தாா்.