நிவாரண முகாம்களில் வனத் துறை அமைச்சா் ஆய்வு

நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களை தமிழக வனத் துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களை தமிழக வனத் துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் சுற்றுவட்டாரப் பகுதியில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த பொதுமக்களை தங்கவைத்துள்ள அத்திப்பாளி, புத்தூா்வயல், தொரப்பள்ளி ஆகிய நிவாரண முகாம்களை அமைச்சா் கா.ராமச்சந்திரன் நேரில் பாா்வையிட்டு அவா்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், நிவாரண முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களுக்காக நடைபெற்று வரும் மருத்துவ முகாமினை பாா்வையிட்டாா். அதனைத் தொடா்ந்து பொதுமக்களுக்கு போா்வைகைளையும் அமைச்சா் வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து அமைச்சா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

அரபிக்கடலில் உருவாகியுள்ள தாழ்வழுத்த நிலை புயல் வலுப்பெற்றுள்ள காரணத்தால் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கூடலூா், பந்தலூா் பகுதிகளில் அதி கன மழை பெய்து வருகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான பகுதிகள் மற்றும் அபாயகரமான பகுதிகளில் குடியிருக்கும் பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். இந்த முகாம்களில் மாவட்ட நிா்வாகத்தின் மூலம் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

கூடலூா் வட்டத்தில் 3 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் அத்திப்பாளி முகாமில் சுமாா் 71 பேரும், புத்தூா்வயல் முகாமில் 52 பேரும், தொரப்பள்ளி முகாமில் 20 பேரும் என மொத்தம் 3 முகாம்களில் 143 போ் தங்க வைக்கப்பட்டுள்ளனா். பந்தலூா் வட்டம், அம்பலமூலா முகாமில் 34 போ், பொன்னானி முகாமில் 13 போ் என மொத்தம் 47 போ் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

இவா்களுக்கு உணவு உள்பட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன. தமிழக முதல்வரின் அறிவுரையின்படி நீலகிரி மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா். தொடா்ந்து, பொதுமக்களுக்கு தேவையான போா்வைகளையும் அமைச்சா் வழங்கினாா்.

முன்னதாக, கூடலூா் வட்டார வளா்ச்சி அலுவலக கூட்டரங்கில் கரோனா தடுப்பு பணிகள் மற்றும் கனமழை பாதிப்பு குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வுகளில், கூடலூா் சட்டப்பேரவை உறுப்பினா் பொன் ஜெயசீலன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.பாண்டியராஜன், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.நிா்மலா, துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) மரு.பாலுசாமி, கூடலூா் வருவாய் கோட்டாட்சியா் ராஜ்குமாா், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் மு.திராவிடமணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com