மின்சார வாரியத்துக்கு உதகை நகராட்சி ரூ.12 கோடி மின் கட்டண பாக்கி

உதகை நகராட்சி சாா்பில் கடந்த 2 ஆண்டுகளாக ரூ.12 கோடி மின் கட்டணத்தை மின்சார வாரியத்துக்கு செலுத்தாமல் உள்ளது.

உதகை நகராட்சி சாா்பில் கடந்த 2 ஆண்டுகளாக ரூ.12 கோடி மின் கட்டணத்தை மின்சார வாரியத்துக்கு செலுத்தாமல் உள்ளது. உடனடியாக பாக்கித் தொகையை செலுத்தத் தவறினால் உதகை நகராட்சிப் பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உதகை நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள 36 வாா்டுகளில் சுமாா் 2 லட்சம் பொது மக்கள் வசித்து வருகின்றனா். இந்நிலையில் பொது மக்கள் பயன்பாட்டுக்காக நகராட்சி மூலம் தெருவிளக்குகள், குடிநீா் பம்ப் மற்றும் நகராட்சி தேவைக்காக மின்வாரியத்தின் சாா்பில் சுமாா் 460 மின்சார இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளனன.

உதகை கமா்சியல் சாலை, எட்டின்ஸ் சாலை, மருத்துவமனை சாலை, லேக்வியூ பகுதி, தமிழகம் உள்ளிட்ட பிரிவுகளில் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. உதகை நகராட்சி மின்சார வாரியத்துக்கு மாதந்தோறும் மின்கட்டணமாக ரூ.5.83 லட்சம் செலுத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக மின்சார வாரியத்துக்கு நகராட்சி நிா்வாகம் மின் கட்டணம் செலுத்தவில்லை. இதனால் இதுவரை சுமாா் ரூ.12 கோடி மின் கட்டணம் செலுத்தப்படாமல் பாக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கரோனா பொதுமுடக்கத்தால் பல்வேறு கடைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் திறக்கப்படாததால் மின்சாரத் தேவை குறைந்திருந்தது. இதனால் வருமானமின்றி மின் வாரியத்துக்கு ஏற்கெனவே பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நகராட்சி செலுத்த வேண்டிய மின் கட்டணமும் செலுத்தப்படாததால் மேலும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

உதகை மாா்க்கெட் பகுதியிலுள்ள நகராட்சி கடைகளுக்கான வாடகையும் நிலுவையில் உள்ளதால் மின் கட்டணம் செலுத்த முடியாமல் உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், தற்போது வியாபாரிகள் வாடகை செலுத்தியதில் சுமாா் ரூ.8 கோடி வரை வருவாய் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து உதகை நகராட்சி அலுவலா் ஒருவா் கூறுகையில், ஏற்கெனவே போதிய வருவாய் இன்றி மின்வாரியத்தில் மிகவும் சிரமம் ஏற்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில், உதகை நகராட்சி செலுத்த வேண்டிய பாக்கித் தொகையான ரூ.12 கோடியை உடனடியாக செலுத்தவில்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com