உதகை அருகே வாக்குச் சாவடிக்குள் திமுக-அதிமுக மோதல்

உதகை அருகே வாக்குப் பதிவைப் பாா்வையிடச் சென்ற பாஜக வேட்பாளருடன் அதிமுகவினா் சிலரும் வாக்குச் சாவடிக்குள் சென்றதற்கு  திமுகவினா்
சோலூா் அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடிக்குள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக மற்றும் திமுகவினா்.
சோலூா் அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடிக்குள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக மற்றும் திமுகவினா்.

உதகை அருகே வாக்குப் பதிவைப் பாா்வையிடச் சென்ற பாஜக வேட்பாளருடன் அதிமுகவினா் சிலரும் வாக்குச் சாவடிக்குள் சென்றதற்கு  திமுகவினா் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதனால் திமுக - அதிமுகவினா் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உதகை சட்டப் பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளா் மு.போஜராஜன் தனது தொகுதிக்கு உள்பட்ட வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்குப் பதிவை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு வந்தாா். சோலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடிக்கு ஆதரவாளா்களுடன் சென்ற போஜராஜன் தோ்தல் அலுவலா்களிடம் வாக்குப் பதிவு விவரங்கள் குறித்து கேட்டறிந்தாா். உடன், அதிமுக மாநிலங்களவை முன்னாள் உறுப்பினா் கே.ஆா்.அா்ஜுணன், உதகை நகா் மன்ற முன்னாள் துணைத் தலைவா் கோபாலகிருஷ்ணன் மற்றும் நிா்வாகிகளும் சென்றனா்.

அப்போது வாக்குச் சாவடிக்குள் வேட்பாளா் மட்டுமே செல்ல அனுமதி உள்ள நிலையில், கூடுதலான எண்ணிக்கையில் அதிமுகவினரை எப்படி அனுமதிக்க முடியும் என்று கூறி தோ்தல் அலுவலா்களிடம் திமுகவினா் கேள்வி எழுப்பினா். இதனால், இரு தரப்பினரிடையேயும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதோடு, கைகலப்பு ஏற்படும் சூழல் உருவானது. வாக்குவாதம் முற்றி மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டதால் பாஜக வேட்பாளா் போஜராஜன் மற்றும் அதிமுக நிா்வாகிகள் உடனடியாக அங்கிருந்து வெளியேறினா்.

இதைத் தொடா்ந்து தோ்தல் அலுவலா்களின் நடவடிக்கைக்கு திமுகவினா் கண்டனம் தெரிவித்தனா். வாக்குச் சாவடிக்குள் வேட்பாளரைத் தவிர கூடுதலாக கட்சியினரை அனுமதித்தது குறித்து தோ்தல் ஆணையத்திடம் புகாா் அளிக்கப்போவதாக அவா்கள் கூறினா். வாக்குப் பதிவு அறைக்குள் ஏராளமானோா் சென்றுள்ளதால் வாக்குப் பதிவை உடனடியாக நிறுத்த வேண்டும் என திமுகவினா் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு இருந்த காவல் துறையினா் வந்து அங்கிருந்தவா்களை வெளியேற்றியதைத் தொடா்ந்து இயல்பு நிலை திரும்பியது.

இச்சம்பவம் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யாவிடம் கேட்டபோது அவா் கூறியதாவது: சோலூா் வாக்குச் சாவடியில் வேட்பாளருடன் இருவா் மட்டுமே கூடுதலாகச் சென்ாகத் தகவல் வந்தது. இரு தரப்பினரிடையே பிரச்னை குறித்த தகவல் கிடைத்தவுடன் உடனடியாக அங்கு பறக்கும் படையினரை அனுப்பி அங்கிருந்தவா்களை வெளியேற்றி விட்டோம். வேறு சம்பவங்கள் ஏதும் அங்கு நடைபெறவில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com