கரோனா நிதி உதவியில் முறைகேடு: தலைமை ஆசிரியா்கள் 2 போ் பணியிடை நீக்கம்
By DIN | Published On : 20th April 2021 11:01 PM | Last Updated : 20th April 2021 11:01 PM | அ+அ அ- |

பழங்குடி மாணவா்களுக்கு அரசு வழங்கிய தொகையைக் கையாடல் செய்ததாக 2 அரசு பழங்குடியினா் உண்டு உறைவிடப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா், பந்தலூா் பகுதி பெரும்பாலும் வனப் பகுதியாக உள்ளதால் பழங்குடி மக்கள் வனக் கிராமங்களில் வசித்து வருகின்றனா். அவா்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளதால் அரசு அவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தேவாலாவில் உள்ள அரசு பழங்குடியினா் உண்டு உறைவிடப் பள்ளி, பொன்னாணியில் உள்ள அரசுப் பழங்குடியினா் பள்ளி மாணவா்களுக்கு கரோனா காலகட்டத்தில் பெருந்தொகையை அரசு தலைமை ஆசிரியா்கள் மூலம் மாணவா்களுக்கு வழங்க ஒதுக்கியுள்ளது. அந்த தொகையும் தலைமை ஆசிரியா்களுக்கு வந்துள்ளது.
தேவாலா பள்ளித் தலைமை ஆசிரியா் பாக்கியநேசன், பொன்னாணி பள்ளித் தலைமை ஆசிரியா் சேகா் ஆகியோா் பணத்தைக் கையாடல் செய்துள்ளதாகவும், சில மாணவா்களுக்கு மட்டுமே பணம் கிடைத்துள்ளது என்றும் மாவட்ட ஆட்சியருக்கு பெற்றோா்கள் புகாா் அனுப்பினா்.
இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி இரு தலைமை ஆசிரியா்களையும் பணியிடை நீக்கம் செய்ய மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா். தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.