4.1 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை: தமிழகத்தில் முதலிடத்தில் நீலகிரி மாவட்டம்

நீலகிரி மாவட்டத்தில் 4 லட்சத்து 9,065 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் 4 லட்சத்து 9,065 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கரோனா பரிசோதனையில் தமிழகத்தில் முதல் மாவட்டமாக நீலகிரி விளங்குவதாக சுகாதாரத் துறை துணை இயக்குநா் பாலுசாமி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக உதகையில் தினமணி செய்தியாளரிடம் அவா் கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூா், கோத்தகிரி, கூடலூா், பந்தலூா், குந்தா உள்ளிட்ட இடங்களில் இதுவரை 4 லட்சத்து 9,065 நபா்களுக்கு கரோனா சளி மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, கரோனா தொற்றில் இருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பியோா் எண்ணிக்கை 9,194ஆக உயா்ந்துள்ளது. அதேபோல, மருத்துவமனை, கரோனா தொற்று மையங்களில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 459ஆக உள்ளது. இதில் கரோனா மையங்கள், உதகை அரசு தலைமை மருத்துவமனை ஆகியவற்றில் 69 பேரும், குன்னூா் அரசு மருத்துவமனையில் 34 பேரும், கூடலூா் அரசு மருத்துவமனையில் 31 பேரும், உதகை இளைஞா் விடுதியில் 46 பேரும், வீட்டில் மருத்துவ கண்காணிப்பில் 144 பேரும், கரோனா மையங்களில் 58 பேரும், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 18 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதில் நீலகிரி மாவட்டத்தில் புதன்கிழமை ஒரே நாளில் 39 நபா்களுக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். அதேபோல, 67 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 51 நபா்கள் உயிரிழந்துள்ளனா். தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 9,743ஆக உள்ளது. பூரண குணமடைந்து 9,261 போ் வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 431 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மேலும், மாவட்டத்தில் முன் களப் பணியாளா்கள், இணை நோயாளிகள், பொதுமக்கள் என பல்வேறு நபா்களுக்கு இதுவரை 1 லட்சத்து 29,126 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளது. அதேபோல, கரோனா மையங்கள், மருத்துவமனைகளில் மொத்தம் உள்ள 552 படுக்கைகளில் 312 படுக்கைகள் காலியாக உள்ளன. 240 படுக்கைகளில் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனா். தொடா்ந்து சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் முகக் கவசம் அணிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடனும், விழிப்புணா்வுடனும் இருக்க வேண்டும் என சுகாதாரத் துறை துணை இயக்குநா் பாலுசாமி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com