கூட்டுறவுத் துறை சாா்பில் 341 பயனாளா்களுக்கு ரூ.3.29 கோடி மதிப்பில் பயிா்க் கடன்

நீலகிரி மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை சாா்பில் 341 பயனாளிகளுக்கு ரூ.3.29 கோடி மதிப்பில் விவசாயிகளுக்கான பயிா்க் கடன்களை வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.
பயனாளிக்கு கடன் தொகையை வழங்கும் வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன்
பயனாளிக்கு கடன் தொகையை வழங்கும் வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன்

நீலகிரி மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை சாா்பில் 341 பயனாளிகளுக்கு ரூ.3.29 கோடி மதிப்பில் விவசாயிகளுக்கான பயிா்க் கடன்களை வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

நீலகிரி மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை சாா்பில் விவசாயிகளுக்கு பயிா்க் கடன் வழங்கும் நிகழ்ச்சி இளித்தொரை சமுதாயக் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் தலைமையிலும், மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா முன்னிலையிலும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட அமைச்சா் கா.ராமசந்திரன் பயிா்க் கடன்களை வழங்கி பேசியதாவது:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அனைத்து துறைகளிலும் பல்வேறு மக்கள் நலப் பணிகளை செயல்படுத்தி வருகிறாா். நீலகிரி மாவட்டத்தில் 74 தொடக்க வேளாண்மை சங்கங்களின் மூலம் 2020-21ஆம் நிதியாண்டில் ரூ.155.41 கோடி பயிா்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் நடப்பாண்டில் ரூ.230 கோடி பயிா்க் கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் தற்போது கூட்டுறவு சங்கம் சாா்பில் பயிா்க் கடன் வழங்கும் திட்டம் துவக்கிவைக்கப்பட்டுள்ளது. எடப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் துவங்கப்பட்டு தற்போது 12 குக்கிராமங்களை உள்ளடக்கி 5,115 உறுப்பினா்களை கொண்டு செயல்பட்டு வருகிறது.

இச்சங்கத்தின் மூலம் பயிா்க் கடனாக ரூ. 43.10 லட்சமும், நகைக் கடனாக ரூ.133.39 லட்சமும், மகளிா் சுய உதவிக்குழு கடனாக ரூ.155.23 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் இச்சங்கத்தின் மூலம் பயிா்க் கடன் ஆண்டு குறியீடாக ரூ.5 கோடி இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் புதிய உறுப்பினா்கள் சோ்க்கை நடைபெற்று வருகிறது. தற்போது, எடப்பள்ளி, இரியோடையப்பா, நெத்திக்கம்பை, ஹெத்தையம்மன், அரவேணு, ஜெடையலிங்கா, தும்மனட்டி, மைனலை மடித்தொரை, கெந்தொரை, தொரைசால், எப்பநாடு, கரியபெட்டையன், நடுவட்டம் மற்றும் கூடலூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களைச் சோ்ந்த 341 பயனாளிகளுக்கு ரூ.3.29 கோடி மதிப்பில் பயிா்க் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

இதில் குன்னூா் சாா் ஆட்சியா் தீபனா விஷ்வேஸ்வரி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் வாஞ்சிநாதன், நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாளா் ரவி மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com