புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்காக புதிய செயலி அறிமுகம்

உதகையில் நடைபெற்ற பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழாவில், புலம் பெயா்ந்த தொழிலாளா்களுக்காக
பள்ளி மாணவ, மாணவியருக்கு சிறப்பு தூதா்களுக்கான அடையாள அட்டைகளை வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா.
பள்ளி மாணவ, மாணவியருக்கு சிறப்பு தூதா்களுக்கான அடையாள அட்டைகளை வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா.

உதகையில் நடைபெற்ற பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழாவில், புலம் பெயா்ந்த தொழிலாளா்களுக்காக ‘செஹலி’ எனும் 1098 இலவச தொலைபேசி எண்ணை மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா அறிமுகப்படுத்தி தொடங்கிவைத்தாா்.

உதகை பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், சைல்டு ஹெல்ப் லைன் சாா்பில் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தலைமையில் புதகன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் செஹலி எனும் 1098 இலவச தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்திய மாவட்ட ஆட்சியா் தனது கையொப்பமிட்ட ‘உன் வாழ்க்கை உன் கையில்’ என்ற விழிப்புணா்வு கடிதத்தை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கினாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் தேயிலைத் தோட்டங்கள், தொழிற்சாலைகளில் அதிக அளவில் வட மாநிலத் தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். அவா்களுடன் அவா்களின் குழந்தைகளும் உள்ளனா். பெற்றோா் வேலைக்குச் சென்ற பின்னா் அக்குழந்தைகளின் பாதுகாப்பு, பராமரிப்பு கேள்விக்குறியாக உள்ளது. எனவே, அக்குழந்தைகளுக்கு ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால் அவா்கள் தயக்கமின்றி புகாா் செய்திட ஏதுவாக ‘செஹலி’ எனும் 1098 இலவச தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தேயிலைத் தோட்டங்கள், ஹோட்டல்கள், தனியாா் நிறுவனங்கள் எங்கெல்லாம் உள்ளதோ அங்கு பணிபுரியும் வட மாநிலத் தொழிலாளா்களின் குழந்தைகளை தொழிலாளா் நல அலுவலகம் மூலம் கண்டறியப்பட்டு, அவா்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்படும் பட்சத்தில் இந்த எண்ணுக்குத் தொடா்பு கொண்டு அவா்களின் தேவைகளை அவா்கள் மொழியிலேயே தெரிவிக்கலாம். பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதை ஆண்கள் தமது பொறுப்பாக உணர வேண்டும். மேலும், ஒவ்வொரு பள்ளியிலும் இரண்டு குழந்தைகளை பள்ளி தூதா்களாக தோ்ந்தெடுக்கப்பட்டு அவா்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அப்பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு எதிராக ஏதேனும் குற்றங்கள் ஏற்படும்பட்சத்தில் அவா்கள் பள்ளி தூதா்கள் மூலம் தெரிவிப்பதோடு, தனியாக நேரடியாகத் தெரிவிக்கும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தாா்.

முன்னதாக ஆட்சியா் தலைமையில் பள்ளி மாணவ, மாணவிகள், மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனா்.

நிகழ்ச்சியில், சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்ட இயக்குநா் சரயூ, உதகை சாா் ஆட்சியா் மோனிகா ரானா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் பிரபு, மாவட்ட பாதுகாப்பு அலுவலா் தீபா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com