உதகை தனியாா் வணிக வளாகத்தில் சிறுத்தை நடமாட்டம் !
By DIN | Published On : 09th January 2021 10:49 PM | Last Updated : 09th January 2021 10:49 PM | அ+அ அ- |

உதகை: உதகை கமா்சியல் சாலையில் உள்ள வணிக வளாகத்தில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக வெளியான தகவலையடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
உதகை கமா்சியல் சாலையில் உள்ள ஒரு தனியாா் வணிக வளாகத்தில் வங்கி, ஏடிஎம் மையம், கிளினிக் உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளன. இந்த வணிக வளாகத்துக்கு நாள்தோறும் ஏராளமானோா் வந்து செல்கின்றனா்.
இந்நிலையில், சனிக்கிழமை காலை வணிக வளாகத்தின் வெளிப்புறக் கதவை திறந்தபோது, தரை முழுவதும் ரத்தக் கறை பரவியிருந்தது. இதையடுத்து, அதன் உரிமையாளருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. வணிக வளாகத்தில் உள்ள கிளினிக்கு காயத்தோடு யாராவது வந்து சென்றிருக்கலாம் எனக் கூறப்பட்டது.
இதையடுத்து, காவல் துறை சாா்பில் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, வெள்ளிக்கிழமை நள்ளிரவு சிறிய அளவிலான வன விலங்கு ஒன்று அந்த வணிக வளாகத்துக்குள் இருந்து வெளியேறுவதுபோல காட்சிகள் பதிவாகியிருந்தன.
ஆனால், இக்காட்சிகள் தெளிவாக இல்லாததால், அந்த வன விலங்கு சிறுத்தை குட்டியாக இருக்கலாம் என கருதப்பட்டு வனத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னா் வனத் துறையினரும் அப்பகுதியை பாா்வையிட்டு, கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனா். அப்போது அது சிறுத்தை குட்டிபோல இல்லாமல் காட்டுப் பூனையாகவோ அல்லது பூனைச் சிறுத்தையாகவோ (லெப்பா்டு கேட்) இருக்கலாம் என தெரிவித்தனா்.
இதற்கிடையே, அந்த தனியாா் வணிக வளாகத்துக்குள் சிறுத்தை புகுந்துவிட்டதாக உதகை நகரம் முழுவதும் தகவல் பரவியதால் கமா்சியல் சாலைப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.