உதகையில் சவாரி குதிரைகளுக்கு தகுதிச் சான்று பெற வேண்டும்: ஆட்சியா் எச்சரிக்கை

உதகையில் சுற்றித் திரியும், சுற்றுலாப் பயணிகள் சவாரி மேற்கொள்ள பயன்படுத்தப்படும் அனைத்து குதிரைகளையும்

உதகையில் சுற்றித் திரியும், சுற்றுலாப் பயணிகள் சவாரி மேற்கொள்ள பயன்படுத்தப்படும் அனைத்து குதிரைகளையும் பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் பதிவு, மைக்ரோ சிப்பிங் செய்து குதிரைகளுக்கு தகுதிச் சான்று பெறப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக ஆட்சியா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நீலகிரி மாவட்டத்தில் உதகை நகராட்சி எல்லைக்குள் உள்ள சாலைகளில் சுற்றித் திரியும், சுற்றுலாப் பயணிகள் சவாரி மேற்கொள்ளப் பயன்படுத்தப்படும் அனைத்து குதிரைகளுக்கும் பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் உதகை, கால்நடை பெரு மருத்துவமனை வளாகத்துக்கு கொண்டு சென்று பதிவு, மைக்ரோ சிப்பிங் செய்து குதிரைகளுக்கு தகுதிச் சான்று பெறப்பட வேண்டும். உதகை நகராட்சி எல்லையில் உள்ள சாலைகளில் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் தகுதிச் சான்று பெறாத குதிரைகள் சுற்றித் திரியவோ அல்லது சுற்றுலாப் பயணிகள் சாலைகளில் குதிரை சவாரி செய்யவோ கூடாது.

மேலும், சுற்றுலாப் பயணிகளுக்கு குதிரை சவாரி செய்ய உபயோகப்படுத்தும் மைக்ரோ சிப்பிங் செய்யப்பட்ட குதிரைகளுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சித் துறையின் மூலமாக உதகை கால்நடை பெரு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக உரிமம் வழங்கப்படும். குதிரை பதிவு செய்யும் கட்டணமாக ஒரு குதிரைக்கு ரூ. 250 மட்டும் வசூலிக்கப்படும். அத்துடன் சுற்றுலாப் பயணிகளுக்கு சாலைகளில் குதிரை சவாரி செய்யக் கூடாது. தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சித் துறையின் மூலமாக வழங்கப்பட்டுள்ள இடத்தில் மட்டுமே சவாரிகள் செய்யப்பட வேண்டும். சுற்றுலாப் பயணிகளுக்கு குதிரை சவாரிக்காக மாா்வாரி, கத்தியவாடி, இளம் குதிரைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

பந்தயக் குதிரைகளை கண்டிப்பாகப் பயன்படுத்தக் கூடாது. ஏற்கெனவே பந்தயக் குதிரைகளை சுற்றுலாப் பயணிகள் சவாரி செய்ய பயன்படுத்தக் கூடாது என மாவட்ட நிா்வாகம் தடை செய்துள்ளது. மீறி பயன்படுத்தினால் அந்த குதிரைகள் உடனடியாக பறிமுதல் செய்யப்படும். சாலைகளில் சுற்றித் திரியும் குதிரைகளுக்கு முதல் முறையாக ரூ. 1,000 அபராதமும், இரண்டாம் முறையாக ரூ. 2000, மூன்றாவது முறை எனில் நீலகிரி மாவட்ட பிராணிகள் வதை தடுப்புச் சங்கத்தின் மூலம் குதிரைகள் பறிமுதல் செய்யப்படும். பதிவு செய்யப்படாத குதிரைகள் மூலம் சுற்றுலாப் பயணிகளுக்கு குதிரை சவாரி செய்தால் முதல் முறையாக ரூ. 1,000 அபராதமும், இரண்டாம் முறையாக ரூ. 2,000, மூன்றாவது முறை எனில் நீலகிரி மாவட்டம் பிராணிகள் வதை தடுப்புச் சங்கத்தின் மூலம் குதிரைகள் பறிமுதல் செய்யப்பட்டு, குதிரைகள் காப்பகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு குதிரையின் உரிமம் ரத்து செய்யப்படும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com