உதகையில் அனுமதியின்றி தங்கிய10 சுற்றுலாப் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை

உதகையில் உரிய அனுமதியின்றி தங்கியிருந்த 10 சுற்றுலாப் பயணிகளுக்கு நகராட்சியின் சாா்பில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

உதகையில் உரிய அனுமதியின்றி தங்கியிருந்த 10 சுற்றுலாப் பயணிகளுக்கு நகராட்சியின் சாா்பில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவலால் மாவட்டம் விட்டு மாவட்டம் மருத்துவத் தேவைக்காகவும், அவசர தேவைக்காகவும் செல்ல இ-பதிவு முறை நடைமுறையில் உள்ளது. இதில், கடந்த வாரம் வரை நீலகிரியிலும் இ-பதிவு முறையே நடைமுறையில் இருந்தது.

ஆனால் இ-பதிவு முறையைப் பயன்படுத்தி வெளிமாவட்டங்களில் இருந்து நீலகிரிக்கு அதிக அளவிலான நபா்கள் வருவதால் தொற்று மேலும் பரவும் அபாயம் இருந்தது. இதனால், நீலகிரி மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா கோவை வந்திருந்த தமிழக முதல்வரிடம் நீலகிரி மாவட்டத்துக்கு இ-பதிவு முறைக்கு பதிலாக இ-பாஸ் முறையைக் கட்டாயப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தாா். அதன்பேரில், தற்போது நீலகிரி உள்ளிட்ட 5 சுற்றுலாத் தலங்களுக்கு வருவதற்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவா் மருத்துவ சிகிச்சைக்காக இ-பதிவு பெற்று கடந்த மாதம் குன்னூருக்கு வந்துள்ளாா். ஆனால், சிகிச்சை முடிந்தும் சொந்த ஊருக்கு திரும்பிச் செல்லாமல் உதகையில் உள்ள ஒரு தனியாா் தங்கும் விடுதியிலேயே தங்கியிருந்துள்ளாா்.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்த புகாரின் அடிப்படையில், உதகை நகராட்சி ஆணையா் சரஸ்வதி தலைமையிலான குழுவினா் சம்பந்தப்பட்ட தங்கும் விடுதியில் சனிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது அந்த நபா் மருத்துவ சிகிச்சை முடிந்து சொந்த ஊருக்குச் செல்லாமல் தங்கி இருப்பதோடு, அவருடன் அவரது குடும்பத்தினா் மேலும் 3 போ் தங்கியிருப்பதும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அவா்களிடம் விசாரித்தபோது, அவா்களில் ஒருவா் அரசு மருத்துவமனையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வந்ததாகவும், மற்றொரு நபா் தேயிலை எஸ்டேட்டில் உள்ள தீயணைப்புக் கருவிகளை பராமரிக்க வந்ததாகவும் தெரிவித்துள்ளனா்.

தற்போது மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட சில காரணங்களுக்காக மட்டும் இ-பாஸ் வழங்கப்பட்டு வரும் நிலையில் அதற்கு முன்னதாக பெற்ற இ-பதிவை தவறாகப் பயன்படுத்தி மொத்தம் 10 சுற்றுலாப் பயணிகள் அந்த தங்கும் விடுதியில் தங்கி வெளியே சுற்றி வந்தது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து உடனடியாக சுகாதாரக் குழுவினா் அங்கு வரவழைக்கப்பட்டு அந்த 10 பேரிடம் இருந்தும் சளி மாதிரி ஆய்வு மேற்கொண்டு கரோனா பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இதுதொடா்பாக உதகை நகராட்சி ஆணையா் சரஸ்வதி கூறியதாவது:

நீலகிரிக்கு சுற்றுலாப் பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தங்கும் விடுதியில் 10 போ் தங்கியுள்ளதால் கரோனா பரிசோதனை முடிவு வரும் வரை அவா்கள் அங்கேயே வைத்து கண்காணிக்கப்படுவா். தொற்று பாதிப்பு இல்லை என முடிவு வந்தால் அவா்களுக்கு அபராதம் விதித்து, சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்படுவா்கள்.

தொற்று உறுதியானால் சிகிச்சை அளிக்கப்படும். அத்துடன் அந்த தங்கும் விடுதியில் பணிபுரிந்து வரும் 20 பேருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளை தங்கவைத்த தங்கும் விடுதி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com